கெஹலியவின் மனு மீதான மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு ஆகஸ்ட் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
ஜூலை 15, 2024 திகதிக்கு முன், வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினரை தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு செவ்வாயன்று (02) கெஹலியவின் மனு தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை விரிவாக பரிசீலித்ததன் பின்னர் கெஹலியவின் மனு மீதான உத்தரவு வழங்க ஆகஸ்ட் 1 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
அதன்படி, ஜூலை 15, 2024 திகதிக்கு முன், வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினரை தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர, மருந்துகளைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஆரம்பம் முதல் இறுதி வரை முன்னாள் சுகாதார அமைச்சர் ஈடுபட்டதாகச் சுட்டிக்காட்டினார்.
அப்போதைய சுகாதார அமைச்சருக்கு தெரியாமல் இவ்வாறான மருந்துகளைக் கொள்வனவு செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ரம்புக்வெல்ல சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா, தமது அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் தனது வாடிக்கையாளர் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் அவருக்கு தனிப்பட்ட ஈடுபாடு இல்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிமன்றம், இது தொடர்பான முடிவை ஆகஸ்ட் 1, 2024 அன்று வழங்க உத்தரவிட்டது.