சட்டவிரோத சுரங்க வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சர் உள்பட 3 பேர் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
சீனிவாஸ் ரெட்டி, ராஜகோபால் ரெட்டி, மஹ்பூஸ் அலிகான் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

ஒபுளாபுரம் சட்டவிரோதச் சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி மற்றும் மூன்று பேர் குற்றவாளிகள் என தெலுங்கானாவின் நாம்பள்ளியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
ரெட்டிக்கு சொந்தமான ஒபுளாபுரம் சுரங்க நிறுவனம் (ஓ.எம்.சி) சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சுரங்க ஊழல் தொடர்பான விசாரணைகள் தொடங்கிய பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இறந்துவிட்டார்.
சீனிவாஸ் ரெட்டி, ராஜகோபால் ரெட்டி, மஹ்பூஸ் அலிகான் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
காலி ஜனார்த்தன் ரெட்டியின் வழக்கறிஞர் ஜிதேந்தர் ரெட்டி, தண்டனையை உறுதி செய்ததோடு, தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் நாளை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று கூறினார்.