லாகூரில் இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதி சுட்டுக் கொலை

அல்-கொய்தா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் (TTP) கயாரா குழுவைச் சேர்ந்த பாலி கயாரா என அறியப்படும் இக்பால் என்ற தீவிரவாதி பொலிஸாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இக்பால் மிகவும் தேடப்படும் தீவிரவாதிகள் ஒருவராக இருந்தார், கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவரும் ஆவார்.
டேரா இஸ்மாயில் கானில் உள்ள ஃபதே மூர் அருகே வியாழக்கிழமை பாகிஸ்தான் பொலிஸ் என்கவுண்டரில் இக்பால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்பால் 26 பயங்கரவாத வழக்குகள் மற்றும் பல்வேறு கொலை குற்றச்சாட்டுகளுடன் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.
2009 ஆம் ஆண்டில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் 7 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததுடன், மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, அஜந்த மெண்டிஸ், திலன் சமரவீர, தரங்க பரணவிதான மற்றும் சமிந்த வாஸ் உட்பட ஏழு வீரர்கள் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.