இந்தியாவின் பாதுகாப்பிற்கு தமிழீழம் அவசியம் - சர்வதேச மாநாட்டில் வலியுறுத்தல்
இலங்கையில் தமிழீழம் அமைந்தால் சீனா, இந்தியா மீதான அச்சுறுத்தல் குறையும் என்பதை வலியுறுத்தி தமிழ் ஈழ வரலாறு பற்றிய புரிதல் மற்றும் இந்து சமுத்திர பாதுகாப்பில் ஈழத் தமிழர்களின் முக்கியத்துவம் குறித்து நான்காவது சர்வதேச மாநாடு நடைபெற்றுள்ளது.
ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் திருமண மண்டபத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயண பீடம் கல்கி மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது.
குறித்த இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாததற்கு மிக வருத்தத்தை தெரிவித்த ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், மதுரை ஆதீனம் தொலைபேசி வாயிலாக நிகழ்வை தொடக்கி வைத்து நிகழ்வு சிறப்புற நிகழ வாழ்த்துரை வழங்கினார்.
இதில் கலந்து கொண்டவர்கள் பேசுகையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக தமிழீழம் அமைய வேண்டும் எனவும் இந்தியா தனது இன்றுள்ள வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் இந்தியாவின் தென்பகுதியில் உள்ள இலங்கையில் இந்திய எதிரி நாடுகளின் ஆக்கிரமிப்பு பற்றியும் பேசப்பட்டது.
சீனா இலங்கையில் தலைமன்னார் பகுதியில் இராணுவ தளவாடங்களை அமைத்து இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.
இலங்கையில் சீனா 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகேயுள்ள இலங்கையின் தென்முனையான தொன்ட்ரா விரிகுடா கடற்பகுதியில் சீனா தனது அறிவியல் அகாடமி விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் மூலம் ராடர் தளம் அமைக்கின்றது.
இதனால் இந்திய கடற்படை, இந்திய கடலோர பொலிஸ் படைகளின் ரோந்து கப்பல்கள், படகுகளின் இயக்கத்தை சீன ராடர் தளத்தால் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளதால் இலங்கையில் தமிழீழம் அமைக்க இந்தியா துணை போக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.