மக்களுக்காக சர்வதேச தலைவர்கள் சிந்திப்பது அவசியம்
பணக்கார நாடுகள் அதிகம் இருக்கும் ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு உக்ரைன். வறுமைக்கோட்டுக்குக் கீழே நிறையப் பேர் வசிக்கும் ஐரோப்பிய நாடு. பனியும் குளிரும் சூழ்ந்த ஐரோப்பாவில் அதிகமான விவசாய நிலங்கள் இருக்கும் நாடும் இதுதான். ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடு இதுதான். நான்கு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இந்தப் பெரிய தேசத்தை ரஷ்யா விழுங்கப் பார்ப்பதுதான் தற்போது உலகின் தலைப்புச் செய்தி.
கோவிட் -19 தாக்கத்துக்கு பின்னர் உலக நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் சவால்களை எதிர்கொண்டுவருகின்றது. அத்துடன் உக்ரைன்-ரஷ்யா போர் அந்த சவால்களை மேலும் மேலும் சவாலுக்குட்படுத்தி வருகின்றது. குறிப்பாக இவ்விரு நாடுகளின் மோதலினால் வல்லரசு நாடுகள் கூட பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உபகரணங்கள் உக்ரைனை நோக்கி நாளாந்தம் பயணித்துக்கொண்டிருக்கிறது. இது இந்த நூற்றாண்டில் நடந்த மோதல்களில் மிகப்பெருமெடுப்பில் இடம்பெறுகின்ற ஓர் போர் என ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டு வருகிறார்கள்.
அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து உருவாக்கிய நேட்டோ கூட்டமைப்பில் இப்போது 30 நாடுகள் இருக்கின்றன. ஒரு நாட்டை யாராவது தாக்கினால், மற்றவர்கள் ராணுவ உதவி செய்ய வேண்டும் என்பது நேட்டோ நாடுகளின் உடன்படிக்கை. ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவை ஏற்கெனவே நேட்டோவில் இணைந்திருக்க, உக்ரைனும் இணைந்துவிட்டால் தன் பக்கத்திலேயே வந்து அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் என்பது ரஷ்யாவின் கவலை. அதனால் உக்ரைனை மிரட்டி நேட்டோவைப் பணியவைக்க முயல்கிறார் புதின். ‘உக்ரைன் மற்றும் ஜோர்ஜியாவை நேட்டோவில் சேர்க்கக் கூடாது. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் இருக்கக் கூடாது’ என்றெல்லாம் கடுமையான நிபந்தனைகள் விதிக்கிறார் புதின். உக்ரைன் விவகாரத்தை வைத்து மீண்டும் ரஷ்யாவை ஒரு வல்லரசாக நிறுவ நினைக்கிறார் அவர். சீனாவைச் சமாளிப்பதே அமெரிக்காவுக்குப் பெரும் வேலையாக இருக்கும் நிலையில், இன்னொரு முனையில் ரஷ்யாவும் தலைவலியாக மாறுவதை அமெரிக்கா விரும்பவில்லை.
ரஷ்யா மீண்டும் வலிமை பெறுவதை ஐரோப்பிய நாடுகளும் அச்சுறுத்தலாக நினைக்கின்றன. அதனால் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க் என்று பல நாடுகளும் படைகளையும் போர் விமானங்களையும் ரஷ்யாவைச் சுற்றியுள்ள நாடுகளில் குவித்திருக்கின்றன. இப்படி ஒவ்வொரு நாடும் தன் வல்லமையை நிரூபிக்க நினைக்கும் விளையாட்டில் உக்ரைன் சிக்கித் தவிக்கிறது. அதனுடன் சேர்ந்து உலக நாடுகளும் மக்களும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறார்கள். குறிப்பாக இந்த யுத்தத்தின் தாக்கம் பெரும் வல்லரசு நாடுகளையே பிச்சைக்காரராக்கும் ஒரு நிலைமையை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதனுடைய தாக்கத்தை இந்த உலகம் நீண்ட காலத்துக்கு அனுபவிக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த எச்சரிக்கைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் ரஷ்யாவுக்கு எதிரான போரை வல்லரசுகள் ஊக்குவித்து கொண்டு வருகின்றன. மேற்படி போரின் காரணமாக பல நாடுகள் திவாலாகி இருக்கும் அதேவேளை, பலர் தங்களுடைய ஆட்சியை விட்டு வெளியேறிய சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அண்மையில் கூட பொருளாதார நெருக்கடியின் காரணமாக இத்தாலி பிரதமர் மரியா டிராகி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அந்த அடிப்படையில் ரஷ்ய-உக்ரைன் வல்லரசு போர் என்பது மிகப்பெரிய தாக்கத்தை இன்னும் சொற்ப நாட்களில் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக இதனுடைய தாக்கம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கிறது. இந்த பூமி என்பது எவருக்கும் சொந்தமில்லாதது. அந்த பூமிக்காக இலட்ச்சக்கணக்கான அப்பாவிகளை ஈவிரக்கமின்றி படுகொலை செய்வதையோ எவருக்குமே சொந்தமில்லாத மண்ணுக்காக சண்டையிடுவதையோ இயற்கை விரும்ப போவதில்லை. இலங்கையில் ஒரு மண்ணுக்காக போராடிய இனத்தை வேரோடு பிடுங்கி எறிந்த சிங்களவர்களுக்கும் அதனுடன் தொடர்புடைய தலைவர்களுக்கும் இயற்கை கொடுத்த தண்டனையை அண்மைக்காலத்தில் உலக நாடுகள் பார்த்திருக்கக்கூடும். இந்த பூமி பந்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு குறிப்பிட்ட நாள் வரை நிம்மதியாக வாழ்வதற்கும், அவன் விரும்பிய வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதற்குமேற்ற ஒரு சூழலை உருவாக்கி தருவதே உலக நாடுகளை ஆளும் தலைவர்களின் தலையாய கடமையாக இருக்கவேண்டுமே தவிர, இந்த பூமியை சுடுகாடாக்கும் நிலையை உருவாக்குவதற்கு அவர்களுக்கு இறைவனோ மக்களோ ஆணை கொடுக்கவில்லை என்பதை புரிந்துகொள்வது அவசியமாகும்.
‘நீதிக்கான குரல்’ இதழின் வாயிலாக வாசகர்கள் அனைவருக்கும் எமது வேண்டுகோள் என்னவென்றால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு நீதிக்காக போராட முன்வரவேண்டும். மேலும் இந்த இதழை உங்களது நண்பர்கள்;, உறவினர்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று வேண்டுகிறோம்.
ஒன்றிணைந்து! இச்சமூகத்தை மாற்ற நம்மால் இயலும். அடுத்த பதிப்பில் யாம் உங்களை சந்திப்போம், அதுவரை அன்புடன்,