பிரித்தானியத் தமிழர் பேரவையின் கோரிக்கை
1996 - 1998 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் காணாமல்போனதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ள 628 பேர் எங்கே? அவர்களுக்கு என்ன நேர்ந்தது எனக் கண்டறியும் செயன்முறையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

செம்மணி, கொக்குத்தொடுவாய் மற்றும் மன்னார் என்பன உள்ளடங்கலாக அடையாளங்காணப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் மனிதப்புதைகுழிகளைப் பொறுப்புடன் கையாள்வதற்குரிய சர்வதேசத்தினால் ஆணையளிக்கப்பட்ட பொறிமுறையை உருவாக்கப்படவேண்டும் எனவும், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் சர்வதேச தடயவியல் மற்றும் விசாரணை நிபுணர்கள் உடனடியாக உள்வாங்கப்படவேண்டும் எனவும் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் பிரித்தானியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
உலகளாவிய ரீதியில் இன்னமும் தீர்க்கப்படாத அதிக எண்ணிக்கையான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதாகவும், அதன் நீட்சியாக தற்போது கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழி நாட்டில் தொடர்ந்து நிலவும் மனித உரிமைகள் நெருக்கடியை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கிறது.
1999 ஆம் ஆண்டு செம்மணி மனிதப்புதைகுழியில் இருந்து 15 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட போதிலும், அதுகுறித்த விசாரணைகள் நம்பத்தகுந்தவாறான விளக்கமளித்தல் இன்றி அதே ஆண்டில் இடைநிறுத்தப்பட்டன. அதுமாத்திரமன்றி அம்மனிதப்புதைகுழியுடன் தொடர்புடைய சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், சட்டவிரோத படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள், குறிப்பாக உத்தரவிடும் பொறுப்பில் இருந்த எந்தவொரு நபரும் தற்போதுவரை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை.
அத்தோடு யாழ் மாவட்டம் பாதுகாப்புப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 1996 - 1998 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் காணாமல்போனதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ள 628 பேர் எங்கே? அவர்களுக்கு என்ன நேர்ந்தது எனக் கண்டறியும் செயன்முறையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் சர்வதேச மேற்பார்வை உடனடியாக உள்வாங்கப்படவேண்டியது அவசியம் என சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியிருக்கிறது. செம்மணி, மன்னார் உள்ளடங்கலாக கடந்த காலங்களில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் உண்மையையும், நீதியையும் நிலைநாட்டுவதற்குத் தவறியிருக்கின்றன.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து சகல நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம் ஆகிய இரண்டையும் இலங்கை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அதன்கீழான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்திருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி தொடர்பான விசாரணைகள் மனித எச்சங்களைக் கண்டறிதல் என்பதற்கு அப்பால் செல்வதற்கு சர்வதேச சட்டத்தின் பிரயோகம் இன்றியமையாததாகும். இக்குற்றங்களுக்குப் பொறுப்பான சகல தரப்பினரையும் கண்டறிவது அவசியம் என்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினரின் மனித உரிமைகளை உறுதிப்படுத்தவும், மனிதப்புதைகுழி அடையாளங்காணப்பட்ட பகுதியை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாக உரியவாறு பேணவும் வேண்டும்.
இலங்கையில் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு, தற்போதைய குற்ற மறுப்புக்கள் மற்றும் சர்வதேச நீதிப்பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தல் என்பவற்றின் பின்னணியில், சில நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
அதன்படி செம்மணி, கொக்குத்தொடுவாய் மற்றும் மன்னார் என்பன உள்ளடங்கலாக அடையாளங்காணப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் மனிதப்புதைகுழிகளைப் பொறுப்புடன் கையாள்வதற்குரிய சர்வதேசத்தினால் ஆணையளிக்கப்பட்ட பொறிமுறையை உருவாக்கல், மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் விசாரணையாளர்கள் குழுவை உடனடியாக ஈடுபடுத்தல், மனித எச்சங்களைப் பாதுகாப்பதற்கும் ஆராய்வதற்கும் செய்மதிப்படங்கள், தடயவியல் நிபுணத்துவ ஆராய்வு, டி.என்.ஏ பரிசோனை போன்றவற்றைப் பயன்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
சர்வதேச சமூகத்தின் அத்தகைய நடவடிக்கைகள் இலங்கையிலும் உலகின் ஏனைய பாகங்களிலும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள், இனவழிப்பு என்பவற்றில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலின்றிப் பாதுகாக்கப்படமாட்டார்கள் என்ற வலுவான செய்தியை வழங்கும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.