சர்வதேச நீதிகோரி வடபகுதியில் கையெழுத்து சேகரிப்பு
வடக்கு - கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மகாணங்களில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கு நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு 29-08-2025 அன்று வடக்கு மாகாணத்திலுள்ள மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவில்
அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு நகரில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜுட்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.லோகேஸ்வரன், முன்னாள் கரைதுறைப்பற்று தபிசாளர் க.விஜிந்தன், மாந்தை கிழக்கு உபதவிசாளர் வரதன், பிரதேச சபை உறுப்பினர்களான அமலன், பவுள்ராஜ், குணம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், கட்சி உறுப்பினர்கள், மதகுருக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம்
வடக்கு - கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாட்டில் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அந்தவகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செ.கஜேந்திரன் மற்றும் சுகாஸ், சர்வேஸ்வரன், கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வவுனியா
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்காக சர்வதேசத்திடம் நீதிகோரி கையெழுத்து போராட்டம் வவுனியா, இலுப்பையடியிலும் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாநகர மேயர் சு.காண்டீபன் உட்பட பலரும் கலந்துகொண்டு கையொப்பங்களை பதிவுசெய்தனர்.
மன்னார்
இதேவேளை மன்னார் நகரிலுள்ள மத்திய பேருந்து நிலையத்தில் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த கையெழுத்து பெறும் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் தமிழ்நேசன் அடிகளார், அருட்தந்தையர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், பொது மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
கிளிநொச்சி
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள புதைகுழிக்கு நீதி வேண்டியும் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து முன்னெடுத்துள்ள கையெழுத்து போராட்டம் கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.





