அமைச்சர் ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும் எதிராக 513 வாக்குகளும் அளிக்கப்படட நிலையிலேயே 104 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளினால் அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும் எதிராக 513 வாக்குகளும் அளிக்கப்படட நிலையிலேயே 104 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 22 எம்,பி க்கள் பங்கேற்கவில்லை.
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கு போதுமான மற்றும் தரமான நிலக்கரி கொள்வனவை உறுதிப்படுத்துவதில் வலுச்சக்தி அமைச்சர் தமது அடிப்படைக் கடமையை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளார் எனவும் அதுமட்டுமன்றி தற்போதைய வலுச்சக்தி அமைச்சர் இலங்கை உரக் கம்பனியின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றிய போது ஊழல் செயல்பாடு ஒன்றை மேற்கொண்டதற்காக அவருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் முறையான குற்றப்பகர்வுப் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளதாலும் அரச நிதி இழப்பு, தேசிய வலு சக்தி பாதுகாப்பை அபாயத்தில் ஆழ்த்துதல், ஊழல் முறையில் கொள்வனவு செயல்முறையை கையாளுதல், ஊழல் குற்றம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்டது.
பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை காலை 11மணிக்கு விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. இந்த விவாதத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட எம்.பி. அஜித் பி. பெரேரா ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
மரிக்கார் எம்.பி வழிமொழிந்து உரையாற்றினார். அரச தரப்பில் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முதல் உரையை நிகழ்த்தினார். விவாத முடிவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மாலை 6,மணியளவில் இடம்பெற்றது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அதன் பங்காளிக்கட்சிகள் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி,புதிய ஜனநாயக முன்னணி ,பொதுஜன பெரமுன ,சுயேட்சைக்குழு 17, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன வாக்களித்தன.
தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் எவரும் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாட்டில் நிற்பதனால் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை . அதேபோல் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட எம்.பி. யான செல்வம் அடைக்கலநாதன், நாமல் ராஜபக்ஷ் உள்ளிட்ட 22 எம்.பி.க்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
அதனடிப்படையில் நம்பிக்கையில்லாத் பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும் எதிராக 153வாக்குகளும் அளிக்கப்படட நிலையிலேயே 104 மேலதிக வாக்குகளினால் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.





