தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்தால் எதிர்க்கட்சிகளின் உறுதிப்பாட்டை விளங்கிக் கொள்ளலாம்: பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
166 இலட்சம் ரூபா அரசநிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.

தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு விடுத்தால் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவின் உறுதிப்பாட்டை விளங்கிக் கொள்ளலாம். ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஊழல்வாதிகள் முன்னெச்சரிக்கையாக ஒன்றிணைந்துள்ளார்கள்.எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு அரசாங்கத்துக்கு சவாலல்ல என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் 27-08-2025அன்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை மோசடி செய்தார், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும் என்று கடந்த காலங்களில் அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அணியினர் தான் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக போரட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறார்கள்.
166 இலட்சம் ரூபா அரசநிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.இதனை எவ்வாறு ஜனநாயக விரோத செயல் என்று குறிப்பிட முடியும்.அவ்வாறாயின் முன்னாள் அமைச்சர்கள் பலர் அரச நிதி மோசடிக்காக இன்றும் சிறையில் உள்ளார்கள் அவ்வாறாயின் அதுவும் ஜனநாயக விரோத செயலா, அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டியது தானே,
தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு விடுத்தால் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவின் உறுதிப்பாட்டை விளங்கிக் கொள்ளலாம். ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஊழல்வாதிகள் முன்னெச்சரிக்கையாக ஒன்றிணைந்துள்ளார்கள்.எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு அரசாங்கத்துக்கு சவாலல்ல.
சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்க கூடாது. சுயாதீன விசாரணைகளுக்கமையவே நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக விமர்சிப்பது முறையற்றது என்றார்.