'அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்': அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டால் கருத்து வெளியிடுபவர்களை அச்சுறுத்தி மௌனமாக்குவதையே காண்கின்றோம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து 'அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்'என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாட்டுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டன.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது.இன்று ரணிலுக்கு நேர்ந்த கதி நாளை பிறிதொருவருக்கு ஏற்படலாம்.ஆகவே ஜனநாயகத்தையும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் சகல தரப்பினரும் அரசியல்,கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வன்னம் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கூட்டாக ஒன்றிணைந்து 24-08-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேசன்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம்,ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரும்,
பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, தயாசிறி ஜயசேகர,ரவி கருணாநாயக்க,நாமல் ராஜபக்ஷ ஆகியோரும்,முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, ஜி.எல்.பீரிஸ், துமிந்த திசாநாயக்க நிமல் சிறிபால டி சில்வா,டிரான் அலஸ், மஹிந்த அமரவீர, பவித்ரா வன்னியராட்சி, அகில விராஜ் காரியவசம், உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துக்கொள்வதாக அறிவித்திருந்த போதும் அவ்விருவரும் கலந்துக்கொள்ளவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரல ஊடக சந்திப்பின் போது வாசித்தார்.
ஊடகசந்திப்பை ஆரம்பித்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் நான் கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன். எமது நாடு தற்போது செல்லும் பயணத்தை பார்க்கும் போது நாட்டின் ஜனநாயகம் தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஜனநாயகம் என்பது இந்த நாட்டில் இரத்தத்துடன் கலந்த விடயமாக உள்ளது.
1948இல் நாடு சுதந்திரமடைந்த நாளில் இருந்து ஜனநாயகம் கட்டம் கட்டமாக பலமடைந்தது. இப்போது இந்த ஜனநாயக சமுகத்தில் இருந்த அடையாளங்கள் மெதுவாக அழிவடைந்து போவதை பார்க்கக்கூடியதாக இருந்தது. ஜனநாயகத்தை புதைப்பதற்கான பிணப்பெட்டியின் பலகைகள் தயார்ப்படுத்தப்படுவது போன்றே தெரிகின்றது. ஜனநாயகத்திற்கு பிரச்சினை ஏற்படுகின்றது என்று தெரிகின்றது என்றால் கட்சி பேதங்களை மறந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக ஒன்றிணைய வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் விடுதலை தொடர்பில் நாங்கள் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஜனாதிபதியென்ற வகையில் கிடைத்த அழைப்புக்கமைய நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே அது தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முழுமையடையாமல் அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டால் கருத்து வெளியிடுபவர்களை அச்சுறுத்தி மௌனமாக்குவதையே காண்கின்றோம். இதனால் ஜனநாயக நிறுவனங்கள் முழுமையாக இல்லாமல் செய்யப்படுகின்றது. இங்கு எமது உரிமைகள் முக்கியமானவையே. இதனை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம்,நாட்டில் சட்டத்தின் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்.சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாறுப்பட்ட கருத்தும் கிடையாது. ஆனால் நடைமுறையில் சட்டத்தின் ஆட்சி முறையாக செயற்படுத்தப்படுகிறதா என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.நீதிமன்றத்தின் தீர்மானத்தை யூடியூபர் முன்னதாகவே அறிவிக்கும் நிலைமை இன்று காணப்படுகிறது.இவ்வாறான போக்கு ஜனநாயக விரோதமானது என்றார்.
ஊடக சந்திப்பில் உரையாற்றிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள். அரசாங்கத்தின் அரசியலமைப்புக்குட்பட்ட சர்வாதிகாரத்துக்கு அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும்ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டனர்.