பலஸ்தீன அழிப்புக்கு நீதிகோரி போராட்டம்
இஸ்ரேல் பலஸ்தீனில் மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கு டொனால் ட்ரப்பின் அரைசாங்கம் மறைமுகமாக மேற்கொண்டுவரும் உதவிகளை நிறுத்துமாறும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியை தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள பலஸ்தீனத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு 14-08-2025 அன்று கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.
பலஸ்தீன் காசா பகுதியில் இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொண்டுவரும் இன அழிப்பை நிறுத்துவதுமாறும் காசா மக்களுக்கான உணவுப்பொருட்களை கொண்டுசெல்ல இஸ்ரேலின் தடைகளை நீக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
போராட்டத்தில் மதகுருமார்கள், அரசியல் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் சிவில் அமைப்பினர் மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இவர்கள் இஸ்ரேல் அரசாங்கம் காசாவில் மேற்கொண்டுவரும் இன அழிப்பை நிறுத்துமாறும் பலஸ்தீன் மக்களின் பூர்விக பூமியில் இருந்து அவர்களை விரட்டுவதை நிறுத்துமாறும், காசா மக்களை பட்டினியில் போடுவதை நிறுத்துமாறு தெரிவித்து கோஷங்களை எழுப்பியும் இஸ்ரேலுக்கு எதிராக எழுதப்பட்ட சுலாேகங்களை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம்வரை இடம்பெற்ற இந்த கவயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபைக்கு கையளிப்பதற்காக பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், சிறிலங்கா கம்யூனிஸ் கட்சி செயலாளர் வைத்தியர் ஜீ. வீரசிங்க மற்றும் சிவில் அமைப்பினர் இணைந்து ஐக்கிய நாடுகள் வதிவிட அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கையளித்தனர்.
அதனையடுத்த அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வைத்தியர் ஜீ. வீரசிங்க குறிப்பிடுகையில், தேசிய மக்கள் கட்சி தவிர நாட்டில் உள்ள ஏனைய அனைத்து கட்சிகளும் இணைந்து பலஸ்தீனை பாதுகாக்கும் தேசிய அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். பலஸ்தீனில் இஸ்ரேல் அரசாங்கம் முன்னெடுத்துச்செல்லும் இந்த இன அழிப்பை நிறுத்தி, அங்கு சமாதானத்தை ஏற்படுத்தும் வரை எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல இருக்கிறோம். அதேநேரம் நாங்கள் பிரதானமான சில கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் ஒன்றை கையளித்திருக்கிறோம். அதில் காசா மக்களுக்கு உணவு கொண்டுசெல்வதை இஸ்ரேல் தடை செய்திருக்கிறது. அதனை உடனடியாக நீக்கி, அந்த மக்களுக்கு உணவு பொருட்களை கொண்டுசெல்ல இடமளிக்க வேண்டும் கோரி இருக்கிறோம் என்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில், இஸ்ரேலுக்கு எதிராக நாங்கள் மேற்கொள்ள இருக்கும் போராட்டத்தின் கவனயீர்ப்பு போராட்டமாக இன்று,ஐக்கிய நாடுகள் வதிவிட அலுகலகத்துக்கு மகஜர் ஒன்றை கையளித்து ஆரம்பித்திருக்கிறோம். அடுத்த கட்டமாக நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் சிவில் அமைப்பினர் என அனைவரையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டங்களை நடத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
குறிப்பாக இதுவரை காலமும் இடம்பெற்ற மோதல்களில் இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும் அவர்களின் இந்த கொள்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நாங்கள் மேற்கொள்ளும் இந்த போராட்டம் யூதர்களுக்கு எதிரானதல்ல, மாறாக நெதன்யாகுவின் சியோனிச அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாகும். அதேநேரம் சுற்றுலா பயணிகளாக வரும் ஒருசிலருக்கு, இந்த நாட்டு மக்களுக்கு இல்லாத சலுகைகளை அரசாங்கம் வழங்கி வருகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும் நாங்கள் மக்களை ஒன்றுதிறட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன் இஸ்ரேல் பலஸ்தீனில் மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கு டொனால் ட்ரப்பின் அரைசாங்கம் மறைமுகமாக மேற்கொண்டுவரும் உதவிகளை நிறுத்துமாறும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஜயந்த சமரசிங்க குறிப்பிடுகையில், நெதனடயாகு, டொனால் ட்ரம்பின் இணைந்து பலஸ்தீனில் பச்சிலம் குழந்தைகளை கொன்றும் நிலையில், அதுதொடர்பில் உறுதியான எந்த கண்டன அறிக்கையையும் வெளியிடாமல் பலவீனமான கொள்கையை அநுரகுமார ஜனாதிபதியின் அரசாங்கம் பின்பற்றி வருகிறது. அதனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த கொடூர செயலுக்கு எதிராக கடுமையான கொள்கையை கடைப்பிடிக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அழுத்தமாக தெரிவிக்கிறோம். அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விடயத்தில் உறுதியான கொள்கையை கடைப்பிடிக்காமல், பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இன அழிப்பை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எனவே பலஸ்தீனில் அமைதியை ஏற்படுத்தும்வரை எமது போராட்டத்தை தொடர்வோம் என்றார்.





