இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக மெத்தியூ டக்வேர்த்
அவுஸ்திரேலியாவில் வாழும் சுமார் 160,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவின் பல்கலாசார சமூகத்துக்கு பெறுமதிவாய்ந்த பங்களிப்பை வழங்கிவருவதாகவும் அவர் பாராட்டு வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக மெத்தியூ டக்வேர்த் நியமிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் தெரிவித்துள்ளார்.அதுமாத்திரமன்றி வடகிழக்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவின் மிகமுக்கிய பங்காளியாக இலங்கை திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவு என்பது வலுவான பரஸ்பர சமூகத்தொடர்புகள், நீண்டகால அபிவிருத்திப் பங்காண்மை, அதிகரித்துவரும் வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகள், அமைதியானதும் நிலையானதும் சுபீட்சமானதுமான இந்து சமுத்திரப்பிராந்தியத்தை உறுதிசெய்வதில் இருநாடுகளும் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாடு என்பவற்றின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது' எனவும் பெனி வொங் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு அவுஸ்திரேலியாவில் வாழும் சுமார் 160,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவின் பல்கலாசார சமூகத்துக்கு பெறுமதிவாய்ந்த பங்களிப்பை வழங்கிவருவதாகவும் அவர் பாராட்டு வெளியிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீஃபென்ஸின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் முடிவுக்குவரவுள்ள நிலையில், அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தில் பணியாற்றிய நீண்டகால அனுபவமுடைய இராஜதந்திரி மெத்தியூ டக்வேர்த் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அவர் இந்தோனேசியா மற்றும் கம்போடியாக ஆகிய நாடுகளுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.





