அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம்; மனுக்கள் மீதான விசாரணை நிறைவு
பிரதம நீதியரசர், இங்கு தர்மத்தை விட சட்டமே முக்கியமானது என்பதால், சட்டத்திற்கு உட்பட்டு வாதங்களை முன்வைக்குமாறு சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், அச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்தான தனது இரகசிய வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்தது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம், இச்சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மற்றும் சட்டமா அதிபரின் வாதங்களை பரிசீலித்த பின்னரே இவ்வுத்தரவைப் பிறப்பித்தது.
இம்மனுக்கள் தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை நாளை (இன்று) பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதியரசர்கள் குழாம் தரப்பினருக்கு அறிவித்தது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் தலைமையிலான குழு இந்த மனுக்களை விசாரணை செய்தது.
மனுக்கள் மீதான விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்:
மனுதாரரான பலங்கொட கஸ்ஸப தேரர், முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பின் 107 (5) ஆவது உறுப்புரையை திருத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் மட்டுமே திருத்த முடியும் என்பதால் இதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் தெரிவித்தார். மேலும், இதன் மூலம் அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த மதத்தைப் பாதுகாத்து போஷிக்கும் பொறுப்பு மீறப்படுவதாகக் கூறி, சூத்திர பீடகத்தை மேற்கோள் காட்டி வாதிட்டார்.
இதன்போது பிரதம நீதியரசர், இங்கு தர்மத்தை விட சட்டமே முக்கியமானது என்பதால், சட்டத்திற்கு உட்பட்டு வாதங்களை முன்வைக்குமாறு சுட்டிக்காட்டினார்.
இடைக்கால மனுதாரர்களின் வாதங்கள்:
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் மீறப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் எதுவுமில்லை என்றும், எனவே இதற்கு சர்வஜන வாக்கெடுப்பு தேவையில்லை என்றும் சட்டத்தரணி சாமர நாநாயக்காரவசம் தெரிவித்தார்.
அமெரிக்கா, பிரித்தானியா,கனடா,அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 70 முதல் 75 ஆக அல்லது ஆயுட்காலம் வரையில் உள்ளதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி நிரஞ்சன் அருள் பிரகாசம், இது தன்னிச்சையான செயலல்ல என்பதால் சர்வஜන வாக்கெடுப்பு அவசியமில்லை எனக் குறிப்பிட்டார்.
சட்டமா அதிபரின் சமர்ப்பணம்
நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரிவுபடுத்தி,திறம்பட முன்னெடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புத் திருத்தச் சட்டமூலங்களை சமர்ப்பித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.





