புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்
குறித்தவொரு குற்றத்துக்கு பரந்துபட்ட அல்லது தன்னிச்சையான வரைவிலக்கணம் வழங்கப்படுவதையும், அதன் தன்னிச்சையான பிரயோகத்தைத் தடுப்பதுமே இதன் பிரதான நோக்கமாகும்.

கருத்து புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா முகவரகத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் புதியதொரு பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபைத் தயாரிப்பதற்கு அவசியமான பரிந்துரைகளை முன்வைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு அண்மையில் வேண்டுகோள்விடுத்திருந்தது. அதற்கமைய அம்பிகா சற்குணநாதனால் நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
பயங்கரவாதம் எனும் பதத்துக்கான வரைவிலக்கணம்
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 9 ஆவது பிரிவானது குறித்தவொரு நபரைக் கைதுசெய்வதற்கோ அல்லது தடுத்துவைப்பதற்கோ சட்டத்தின் ஊடாக வரையறுக்கப்பட்ட நியாயமான காரணம் இருக்கவேண்டும் எனவும், அவ்வரையறையானது மிகத்தெளிவாக போதிய விளக்கத்தைத் தரக்கூடியவகையில் அமையவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.
குறித்தவொரு குற்றத்துக்கு பரந்துபட்ட அல்லது தன்னிச்சையான வரைவிலக்கணம் வழங்கப்படுவதையும், அதன் தன்னிச்சையான பிரயோகத்தைத் தடுப்பதுமே இதன் பிரதான நோக்கமாகும்.
எனவே உயிரிழப்பையோ அல்லது படுகாயத்தையோ ஏற்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், அரச பயங்கரவாதத்தைத் தூண்டுதல், குறித்தவொரு சமூகப்பிரிவினரை ஒடுக்குதல் அல்லது அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுமாறு அரசாங்கத்தையோ அல்லது சர்வதேச அமைப்பொன்றையோ கட்டாயப்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சர்வதேச பிரகடனங்களில் பயங்கரவாதம் எனும் பதத்துக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் ஆகிய மூன்று விடயங்களும் 'பயங்கரவாதம்' என்ற சொல்லுக்கான வரைவிலக்கணத்தில் நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும்.
அத்தோடு அவ்வரைவிலக்கணமானது குறிப்பானதாகவும், உரிய சட்டக்கோட்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் அமையவேண்டும்.
அதேவேளை இவ்வரைவிலக்கணம் 'தேசிய, இன மற்றும் மத வெறுப்புணர்வு' அல்லது 'ஒடுக்குமுறை வன்முறை' அல்லது 'அத்தியாவசிய சேவை வழங்கலுக்கான இடையூறு' போன்ற பரந்துபட்ட விளக்கத்தை உள்ளடக்கியிருக்கக்கூடாது.
முன்னைய அரசாங்கங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபுகளில் இவ்வாறான பதங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. இவை கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்குவதற்கும், தொழிற்சங்க நடவடிக்கை போன்ற சட்ட ரீதியான சிவில் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படக்கூடும்.
சட்ட அமுலாக்கத்தில் இராணுவமயமாக்கல்
பயங்கரவாதக்குற்றங்களுக்காக நபர்களைக் கைதுசெய்வதற்கோ அல்லது குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ இராணுவத்தினருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான சரத்துக்கள் புதிய வரைபில் உள்வாங்கப்படக்கூடாது.
பொலிஸ் காவல்
கைதுசெய்யப்பட்டு பொலிஸ்காவலின்கீழ் வைக்கப்பட்டிருக்கும் நபர், கைதுசெய்யப்பட்டு 48 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவேண்டும்.
சட்ட உதவி மற்றும் குடும்பத்தாருடனான தொடர்பாடல்
பயங்கரவாதக்குற்றத்துக்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் நபரின் சட்ட உதவியை நாடுவதற்கான உரிமை கட்டாயம் உறுதிசெய்யப்படவேண்டும். ஏனெனில் கைதுசெய்யப்பட்ட நபரின் அறியாமையைப் பயன்படுத்தி, அவரிடம் சட்டத்துக்கு முரணான வகையில் பொய்யான வாக்குமூலத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.
அத்தோடு கைதுசெய்யப்பட்ட நபர் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புகொள்வதற்கும், குடும்பத்தினர் தமது உறவினர் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்பது பற்றி அறிந்துகொள்வதற்கும் இடமளிக்கப்படவேண்டும்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவரை பார்வையிடல்
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபரை குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருமுறையேனும் முன்கூட்டிய அறிவிப்பின்றி நீதிவான் சென்று பார்வையிடல் மற்றும் கண்காணித்தல் எனும் சரத்தின் செயற்திறனை வலுப்படுத்தக்கூடிய விடயங்கள் புதிதாக உருவாக்கப்படக்கூடிய சட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும்.
ஜனாதிபதிக்கான மட்டுமீறிய அதிகாரங்கள்
புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் நீதிமன்ற அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படக்கூடாது.