இந்தியா - இலங்கை மின் கட்டமைப்பு இணைப்பு குறித்த மெய்நிகர் கூட்டம்
மின் கட்டமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நடைமுறைகள் தொடர்பான அம்சங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
இந்தியா - இலங்கை மின் கட்டமைப்பு இணைப்பைச் செயல்படுத்துவது தொடர்பான நடைமுறைகளைப் பற்றி கலந்தாலோசிப்பதற்கான 30-10-2025 அன்று மெய்நிகர் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளினதும் மின் சக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தனர். அதற்கமைய இந்தியக் குழுவுக்கு இந்திய மின் சக்தி அமைச்சின் செயலாளரான பங்கஜ் அகர்வால் , இலங்கை மின் சக்தி அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால ஆகியோல் இதற்கு தலைமை தாங்கினார்.
மின் கட்டமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நடைமுறைகள் தொடர்பான அம்சங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
கடந்த ஜூன் 16ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தின்போது, இந்தியா - இலங்கை மின் கட்டமைப்பு இணைப்பின் தொழில்நுட்ப அளவுருக்களை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தியிருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்த மின் செலுத்துகை இணைப்பானது இலங்கையில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் மின்சாரத்தை இறக்குமதி செய்யவும், தேவைப்படும்போது புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியைப் பெறவும் உதவும்.
இது ஏற்றுமதியையும் வலுசக்தி மூலங்களையும் பல்வகைப்படுத்துவதற்கும், கட்டமைப்பு நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், பிராந்திய மின் சந்தையில் ஒருங்கிணைவதற்கும் புதிய வாய்ப்புகளைத் ஏற்படுத்தும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இரு தரப்பினரும் மேலும் அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுபவர் என இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.





