ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு
இந்த சட்டமூலம் 2025.07.31 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரிசுரிக்கப்பட்டது. 30 ஆம் திகதி வர்த்தமானி அச்சிடப்பட்டது.

1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டத்தை இரத்துச் செய்யும் பொருட்டு ஆக்கப்பட்ட சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷ நாணயக்கார முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.
பாராளுமன்றம் 07-08-2025 அன்று கூடிய போது ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 1986 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டத்தை நீக்கும் சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
1978 (1) ஆம் இலக்க சட்டம் மற்றும் பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் 52(5) பிரகாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் ஏதேனும் ஒரு சட்டமூலம் 7 நாட்களுக்கு பின்னரே முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த சட்டமூலம் 2025.07.31 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது. பிரசுரிக்கப்பட்ட தினத்தை கணக்கில் எடுக்க முடியாது.
அவ்வாறாயின் இந்த சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு இன்றுடன் (நேற்று) தான் 7 நாட்கள் நிறைவடைகின்றன. ஆனால் சட்டத்தில் 7 நாட்கள் நிறைவடைந்ததன் பின்னரே முதலாம் வாசிப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு முரணாக செயற்பட வேண்டாம். இந்த சட்டமூலத்தை அடுத்த அமர்வில் முதலாம் வாசிப்புக்கு சமர்ப்பியுங்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் 78(1) பிரிவை ஆராயாமல் இந்த சட்டமூலத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. இந்த சட்டமூலம் 2025.07.31 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரிசுரிக்கப்பட்டது. 30 ஆம் திகதி வர்த்தமானி அச்சிடப்பட்டது. 31 ஆம் திகதியை ஏன் கணக்கில் எடுக்க கூடாது என்பதற்கான உரிய காரணிகள் ஏதும் கிடையாது.
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட இந்த சட்டமூலம் 7 நாட்கள் கருத்தாடலுக்கு விடப்பட்டதன் பின்னரே முதலாம் வாசிப்புக்கு சமர்ப்பிக்க பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் சேர்க்கப்பட்டது என்று குறிப்பிட்டு சட்டமூலத்தை முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பித்தார்.