செம்மணிக்கு சர்வதேச கண்காணிப்பு தேவை; சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு
பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களை சட்ட ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்துவோருடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவதுடன் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக செயற்படவேண்டும்.

நீதியை நிலைநாட்டுவதில் உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத் தோல்வியைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் நிலையான சர்வதேச கண்காணிப்பு உள்வாங்கப்படவேண்டியது மிக அவசியமாகும். அதற்கமைய சுயாதீன சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும். அகழ்வு செயன்முறை தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மைவாய்ந்த முறையில் தெளிவுபடுத்தவேண்டும் என சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் புதுப்பிக்கவேண்டும் எனவும் அந்த ஆணைக்குழு வேண்டுகோள்விடுத்துள்ளது.
யாழ் செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் 27-07-2025 வரையான காலப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படுபவை உள்ளடங்கலாக 101 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை நோக்கிய பயணத்தில் இந்த மனிதப்புதைகுழி அகழ்வு மிகமுக்கியமான முதற்கட்ட செயன்முறையாகும். அதேவேளை இந்த அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணை செயன்முறை என்பன சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். குறிப்பாக அவை உயிரிழந்தோரினதும், அவர்களது குடும்பத்தாரினதும் உரிமைகளையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும்.
மனிதப்புதைகுழியில் கண்டறியப்படும் ஒவ்வொரு மனித எலும்புக்கூட்டின் பின்னணியிலும் நினைத்துப்பார்க்கமுடியாத துன்பத்துக்கு முகங்கொடுத்த ஒரு குடும்பம் இருக்கிறது. எனவே இந்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பான தடயவியல் விசாரணைகள் தனிமனித கௌரவத்துக்கான மரியாதையுடனும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முழுமையான பங்கேற்புடனும் முன்னெடுக்கப்படவேண்டும். அதுமாத்திரமன்றி இக்குற்றங்களின் பாரதூரத்தன்மையைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், இச்செயன்முறையானது உச்சபட்ச நேர்த்தியுடனும், சட்ட நியமங்களுக்கு அமைவாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச மேற்பார்வை இன்றியமையாததாகும். செம்மிண மனிதப்புதைகுழி அகழ்வானது இலங்கையின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் மிகமுக்கியமானதொரு தருணத்தைப் பிரதிபலிக்கின்றது.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவினால் 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து செம்மணி மனிதப்புதைகுழி தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவதானம் பெற்றது. அன்று முதல் இன்றுவரை இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளடங்கலாக மிகமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களைப் பொறுத்தமட்டில் நீண்டகாலமாகத் தொடரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்குக்கான அழுத்தமானதும், வலிமிகுந்ததுமான அடையாளமாக அது திகழ்கின்றது. சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் செம்மணி - சித்துபாத்தியில் மனித எச்சங்கள் கண்டறியப்பட்டிருப்பதானது உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன அடையப்படுவதற்கு வழிவகுக்கக்கூடியவகையில் பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய நம்பத்தகுந்த, வெளிப்படைத்தன்மை வாய்ந்த, உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடியவாறான விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது.
உலகளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையான தீர்க்கப்படாத வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அங்கு 60,000 - 100,000 க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியிருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டிருப்பதுடன் அவற்றில் பெரும்பான்மையானவை 1983 - 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்ற இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான ஆயதப்போராட்டகாலத்தில் பதிவானவையாகும். ஆயுதமோதல் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் போரின் பின்னரான கரிசனைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேற ஆணைக்குழுக்கள் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டன. இருப்பினும் அந்த ஆணைக்குழுக்கள் பெரும்பாலும் நல்லிணக்கம் தொடர்பில் கவனம் செலுத்தினவே தவிர, பொறுப்புக்கூறல் குறித்து போதுமானளவு அவதானம் செலுத்தவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் சர்வதேச கட்டமைப்புக்களின் தொடர்ச்சியான வலியுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான உண்மையை அறியும் உரிமை, நீதி மற்றும் செயற்திறன்மிக்க இழப்பீடு என்பன தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகின்றன.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் சர்வதேசத்தின் பங்கேற்புடனான நீதிச்செயன்முறை உள்ளடங்கலாக நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு வலியுறுத்தி 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை இணையனுசரணை வழங்கியது. இருப்பினும் அத்தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஆரம்பத்தில் நேர்மறையானதொரு நகர்வாக நோக்கப்பட்டாலும், அரசியல்மயமாக்கல், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சுதந்திரம், மக்கள் மத்தியிலான நம்பிக்கையீனம் போன்றவற்றால் அக்கட்டமைப்பு நீண்டகாலமாக பின்னடைவை சந்தித்திருந்தது. தற்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைக் கண்காணித்துவரும் நிலையில், முன்னெப்போதையும் விட இப்போது அவ்வலுவலகம் தனது சுயாதீனத்துவத்தை உறுதிசெய்யவேண்டியது அவசியமாகும். அதுமாத்திரமன்றி அவ்வலுவலகம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களை சட்ட ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்துவோருடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவதுடன் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக செயற்படவேண்டும்.
நீதியை நிலைநாட்டுவதில் உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத் தோல்வியைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் நிலையான சர்வதேச கண்காணிப்பு உள்வாங்கப்படவேண்டியது மிக அவசியமாகும். இம்மனிதப்புதைகுழி அகழ்வு வெறுமனே தடயவியல் நடவடிக்கையாக மாத்திரம் அமையக்கூடாது. மாறாக இது வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தல், பாதிக்கப்பட்ட தரப்பினரை அடையாளங்காணல், குற்றவாளிகளைத் தண்டித்தல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரியவாறான நிவாரணங்களை வழங்கல் என்பன தொடர்பில் உரிய சர்வதேச சட்டக்கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் பின்பற்றியிருக்கிறது என்பதற்கான முன்னுதாரணமாக இவ்விடயம் அமையவேண்டும்.
மேலும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் சர்வதேச கண்காணிப்பு மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிபுணத்துவம் என்பன உள்வாங்கப்படவேண்டும். அதற்கமைய சுயாதீன சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும். அகழ்வு செயன்முறை தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மைவாய்ந்த முறையில் தெளிவுபடுத்தவேண்டும். அடையாளம் காணப்படும் மனித எச்சங்கள் உள்ளிட்ட சான்றாதாரங்கள் உரியமுறையில் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்.