நிகழ்நிலை சட்டம் கணிசமான அளவில் திருத்தம் செய்யப்படும்: அமைச்சர் ஆனந்த
2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு சொலிசிட்டர் ஜெனரால் விராஜ் ஜயரத்ன தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சுக்கள், இன முறுகளை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுதல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. நிகழ்நிலை காப்புச் சட்டம் கணிசமான அளவில் திருத்தம் செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்கள் முறையான வழிமுறையுடன் கண்காணிக்கப்பட வேண்டும்.வெகுவிரைவில் இந்த சட்டம் திருத்தம் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 26-09-2025 அன்று நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சமூக ஊடகத் தளங்களில் பரப்பப்படும்,குறிப்பாக .இலங்கையில் இன முறுகலை அல்லது கும்பல் வன்முறைகளைத் தூண்டும் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களின் உள்ளடக்கங்கல்கள் பரப்புதலை கண்காணித்துக் கட்டுப்படுத்துவதற்காக 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றச்செயல்கள் சட்டத்தின் 6 ஆம் பிரிவின் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்தகைய ஆபத்தான உள்ளடக்கங்களைப் பரப்புவதைத் தடுப்பதற்காகச் சமூக ஊடக நிறுவனங்களுடன் தொலைத்தொடர்புச் சேவை வழங்குநர்களுடனும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்கீட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு தண்டனைச் சட்டக்கோவை 20(120) ஆம் உறுப்புரையின் 6 ஆம் பிரிவின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு சொலிசிட்டர் ஜெனரால் விராஜ் ஜயரத்ன தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, டிஜிட்டல் அபிவிருத்தி அமைச்சு மற்றும் நீதியமைச்சு ஆகிய பிரதான அமைச்சுக்கள் கூட்டாக இணைந்து செயற்படுகின்றன.
சமூக கட்டமைப்பில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் மற்றும் கருத்துக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த சமூக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளோம் என்றார்.