அமெரிக்க விசா மறுக்கப்பட்ட எம்.பி., சீனாவுக்கு பாராட்டு மழை
சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஆசியாவிற்கான போவா மன்றம் (BOAO) உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், ஆசிய நாடுகளுக்கு இடையேயான பிணைப்பை மேற்கத்திய உலகம் ஒருபோதும் புரிந்து கொள்ளாது என்றார்.

அமெரிக்கா செல்வதற்கு வீசா மறுக்கப்பட்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, ஆசியாவின் தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான நண்பர் என சீனாவை குறிப்பிட்டு பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஆசியாவிற்கான போவா மன்றம் (BOAO) உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், ஆசிய நாடுகளுக்கு இடையேயான பிணைப்பை மேற்கத்திய உலகம் ஒருபோதும் புரிந்து கொள்ளாது என்றார்.
“இது வர்த்தகம் மற்றும் முக்கியமாக பௌத்தம் மூலம் பரிணமித்து வளர்க்கப்படுகிறது. சீனா ஆசியாவின் தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான நண்பராக இருந்து வருகிறது.
பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ நாடான சீனா, மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உலகின் மிக இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்தபோது மேற்கத்திய நாடுகளால் இழிவுபடுத்தப்பட்டோம், ஆனால் சீனா எப்போதும் எங்களுக்கு ஆதரவாக நிற்கிறது, ”என்று அவர் கூறினார்.
அண்மையில், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்குத் தலைமை தாங்கும் சிறிலங்கா எம்.பி.க்களுக்கான நிகழ்ச்சித் திட்டத்திற்காக வீரசேகரவுக்கு அமெரிக்கா செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. வீரசேகர தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக உள்ளார்.