செம்மணிக்கு நீதிகோரி கொழும்பில் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்பட்ட போது பொலிஸார் அதற்கு தொடர்ந்து தடையேற்படுத்தினார்.இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'பொலிஸ் அராஜகம், பொலிஸ் அராஜகம்' என்று கோசமெழுப்பினர்.

செம்மணி சமூக படுகொலைக்கு எதிராக எழுச்சிக் கொள்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் நீதிக்கான மக்கள் சக்தி மற்றும் சிவில் அமைப்பினர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்ல முயன்ற பேரணிக்கு பொலிஸார் தடையேற்படுத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும்,பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
செம்மணி மனித படுகொலை விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீதிக்கான போராட்டத்துக்கு தடையேற்படுத்தப்படும் போது எவ்வாறு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வியெழுப்பினர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, படலந்த அறிக்கை எங்கே, செம்மணிக்கு நீதி வேண்டும்,தமிழ் இனவழிப்புக்கு நீதி வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கு மனித புதைகுழிகளின் உண்மை வெளிவர வேண்டும், மனித குலத்துக்கு எதிரான மீறல்களுக்கு நியாயம் வேண்டும்' என்று பதாதைகளை ஏந்தியவாறு இருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'செம்மணி சமூக படுகொலைக்கு எதிராக எழுச்சிக் கொள்வோம்' என்று பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியவாறு ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்வதற்கு முற்பட்டனர்.இதன்போது அவ்விடத்துக்கு வருகைத் தந்த பொலிஸ் அதிகாரிகள் பேரணியை இடைமறித்தனர்.
'ஜனாதிபதி செயலகம் வரை செல்வற்கு அனுமதி கோரப்படவில்லை.அனுமதி வழங்கப்படவில்லை,ஆகவே பேரணியாக செய்வதற்கு இடமளிக்க முடியாது' என்று பொலிஸார் குறிப்பிட்டு பேரணியை இடைமறித்தனர்.
இதன்போது போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.போராட்டத்தில் கலந்துக்கொண்;ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளராக ஜோசப் ஸ்டாலின் இது நீதிக்கான அமைதி வழி போராட்டம் ஆகவே எவருக்கும் பாதிப்பை நாங்கள் ஏற்படுத்த போவதில்லை.ஆகவே ஜனாதிபதி செயலகம் வரை செல்வதற்கு அனுமதியளியுங்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த பொலிஸ் உத்தியோகத்தர் வீதிக்கு நடுவில் பேரணியாக சென்றால் வாகன நெரிசல் ஏற்படும்.ஆகவே பேரணியாக செல்வதற்கு அனுமதியளிக்க முடியாது.இருப்பினும் வீதியின் மருங்கில் செல்லவாம்.ஆனால் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் செல்ல முடியாது என்று குறிப்பிட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்பட்ட போது பொலிஸார் அதற்கு தொடர்ந்து தடையேற்படுத்தினார்.இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'பொலிஸ் அராஜகம், பொலிஸ் அராஜகம்' என்று கோசமெழுப்பினர்.
ஜனாதிபதி செயலகத்துக்கு செல்வதற்கு தடையேற்பட்டதன் பின்னர் போராட்டகார்கள் புகையிரத நிலையத்தின் முன்பாக இருந்தவாறே 'செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டும்'என்று கோசமெழுப்பனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அருட்தந்தை மற்றும் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் செம்மணி மனிதப்படுகொலை விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீதிக்கான போராட்டத்துக்கு தடையேற்படுத்தப்படும் போது எவ்வாறு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது என்று கேள்வியெழுப்பினர்.