எமது போராட்டம் ரணில் என்ற தனிநபருக்கானதல்ல: தயாசிறி எம்.பி
எமது இந்த இணைவானது வெறுமனே ரணில் விக்கிரமசிங்க என்ற தனி நபரை மாத்திரம் பாதுகாப்பதற்கானதல்ல என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கின்றோம்.
உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு பிள்ளையானின் கட்சியுடன் கூட்டணியமைத்த தேசிய மக்கள் சக்திக்கு எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவை விமர்சிப்பதற்கு தகுதியில்லை. இது ரணில் விக்கிரமசிங்க என்ற தனி நபருக்கான போராட்டம் இல்லை. மாறாக ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு நாடு அராஜக நிலைக்கு செல்வதை தடுப்பதற்கான போராட்டமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் 25-08-2025அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்கத்துக்கு பாரிய வலியைக் கொடுத்திருக்கிறது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையும் என அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. நாம் ஒவ்வொரு கட்சிகளையும் கொள்கைகளையும் பின்பற்றினாலும் அனைவரும் இணைந்து செயற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படக் கூடும். அரசியலில் எதிரிகளும் நண்பர்களும் எப்போதும் இணைந்தோ அல்லது பிரிந்தோ இருப்பதில்லை.
2004இல் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் அன்று உதவியது. 1988களில் தமது கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணிகளை ராஜபக்ஷர்களே கொன்றதாகக் கூறிக் கொண்டிருந்த ஜே.வி.பி.யே இவ்வாறு மஹிந்தவுக்கு ஒத்துழைப்பு வழங்கியது. இப்போது பட்டலந்த ரணில் என விமர்சிப்பவர்கள், 2010இல் சரத் பொன்சேக்காவை ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் ஆக்குவதற்கு முழுமையாக ஆதரவளித்தனர்.
இதற்கு ஜே.வி.பி. வழங்கும் பதில் என்ன? இவை மாத்திரமின்றி 2015இல் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கும் இவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். அது மாத்திரமின்றி 2018இல் மைத்திரிபால சிறிசேனவை விட, ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததும் இதே ஜே.வி.பி.யே தவிர வேறு எந்த கட்சியுமல்ல. இந்த வரலாறுகளை நாம் இவர்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்.
எனவே நாம் தற்போது ஒன்றிணைந்துள்ளமையை விமர்சிக்கும் தகுதி அரசாங்கத்துக்கு இல்லை. இவற்றுக்கு அப்பால் கடந்த மாதங்களில் பிரதேசசபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமின்றி பிள்ளையானின் கட்சி உறுப்பினர்களைக் கூட இவர்கள் இணைத்துக் கொண்டனர். எவ்வித நிபந்தனைகளும் இன்றி இவ்வாறு எதிர்க்கட்சிகளை இணைத்துக் கொண்டவர்கள் இன்று தூய்மையானவர்களைப் போன்று செயற்படுகின்றனர்.
எமது இந்த இணைவானது வெறுமனே ரணில் விக்கிரமசிங்க என்ற தனி நபரை மாத்திரம் பாதுகாப்பதற்கானதல்ல என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கின்றோம். அதற்கான தேவையும் எமக்கு இல்லை. ஆனால் அரசாங்கத்தால் நாட்டின் ஜனநாயகம் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல் நிலைமையை சரி செய்ய வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும். அரசியலமைப்பு ஏகாதிபத்தியமயப்பட்டுள்ளதோடு, பொலிஸ் முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசியல் பழிவாங்கல்களுக்காக நீதித்துறையில் தலையிட்டு அழுத்தம் பிரயோகிப்பதற்கான வேலைத்திட்டங்களும் புறம்பான முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான காரணிகளைத் தடுக்கும் வகையிலேயே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இவற்றுக்கு எதிராக இப்போது குரல் கொடுக்காவிட்டால் இது நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்லும் என்றார்.





