வரவு, செலவுத் திட்ட ம் குறித்து கடுமையான தீர்மானம்: சாணக்கியன் எம்.பி. அறிவிப்பு
பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கினார்கள். இந்த ஒருவருடத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரி ஐந்து மாதங்கள் காத்திருக்கிறோம்.இதுவரையில் பதிலேதும் கிடைக்கவில்லை. வரவு,செலவுத் திட்டத்தின் போது கடுமையான தீர்மானம் எடுப்போம். தமிழ்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நிலையான தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கொழும்பில் 06-11-2025 நடைபெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி நாளை (இன்று) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் ஊடாக பாரியதொரு மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசாங்கம் அரச சேவையாளர்களின் சம்பளத்தை ஆறு மாதத்துக்கு ஒருமுறை அதிகரிப்பதாகவும், வரி குறைப்பதாகவும், அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மின்கட்டணத்தை குறைப்பதாகவும் குறிப்பிட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் ஏதும் நடக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்துக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுகிறது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாயின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்தில் இருந்து விலக வேண்டும்.
அரசியல் கட்சிகளில் உள்ள அனைவரும் தூய்மையானவர்கள், சிறந்தவர்கள் என்று எவருக்கும் சான்றிதழ் வழங்க முடியாது. தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் தமது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தூய்மையானவர்கள், ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்கள் மோசடியாளர்கள் என்று குற்றஞ்சாட்டியது. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதால் அனைவரும் அதனை பற்றியே பேசுவார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பற்றி ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல விடயங்களை பேசினார். ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக குறிப்பிட்டார்கள். ஆனால் தற்போது சிறைக்கைதிகள் எவருமில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.
பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கினார்கள். இந்த ஒருவருடத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு கடந்த ஜூன் மாதம் அனுமதி கோரியிருந்தோம். இதுவரையில் எமக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. ஆகவே வரவு செலவுத் திட்டத்தின் போது கடுமையான தீர்மானத்தை எடுப்போம்.
எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பேரணிக்கு எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, எனக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் நாங்கள் செல்ல போவதில்லை என்றார்.





