செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை: பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில்
இந்திய அரசாங்கமானது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும் என உடனடியாக வலியுறுத்தவேண்டும்.

செம்மணி மனிதப்புதைகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் நிலப்பரப்பு மாத்திரம் அல்ல. மாறாக அது ஒடுக்கப்பட்ட உண்மைகளுக்கும், தாமதிக்கப்பட்ட நீதிக்குமானதோர் குறிகாட்டியாகும். அதன்படி ஈழத்தமிழர்களுடன் மொழியியல், கலாசார மற்றும் குடும்பம் சார்ந்த தொடர்புகளைப்பேணிவரும் தமிழக மக்களால் இதுகுறித்து கரிசனையின்றி இருக்கமுடியாது.
எனவே செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடன்கூடிய சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை முன்னிறுத்தி இந்திய அரசாங்கம் இயங்கவேண்டும் என இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் வலியுறுத்தியுள்ளார்.
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் இந்தியப் பாராளுமன்றமான லோக்சபையில் உரையாற்றுவதற்கு அனுமதிகோரி லோக்சபையின் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே சசிகாந்த் செந்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது;
இலங்கையின் வடமாகாணத்தில் யாழ். செம்மணியில் அண்மையில் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழி தொடர்பில் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றேன். மனிதப்புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள, யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கக்கூடும் என நம்பப்படும் எலும்புக்கூடுகள், இலங்கைவாழ் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் நீண்டகாலமாக நிலவும் காயங்களை மீளப்புதுப்பித்துள்ளன.
பல தசாப்தகாலமாக இலங்கைவாழ் தமிழ்மக்கள் கட்டமைக்கப்பட்ட வன்முறைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் நீதிப்புறக்கணிப்பு என்பவற்றுக்கு முகங்கொடுத்துவந்திருக்கின்றனர். அந்தவகையில் செம்மணி மனிதப்புதைகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் நிலப்பரப்பு மாத்திரம் அல்ல.
மாறாக அது ஒடுக்கப்பட்ட உண்மைகளுக்கும், தாமதிக்கப்பட்ட நீதிக்குமானதோர் குறிகாட்டியாகும். எனவே ஈழத்தமிழர்களுடன் மொழியியல், கலாசார மற்றும் குடும்பம் சார்ந்த தொடர்புகளைப்பேணிவரும் தமிழக மக்களால் இதுகுறித்து கரிசனையின்றி இருக்கமுடியாது.
இந்நிலையில் இந்திய அரசாங்கமானது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும் என உடனடியாக வலியுறுத்தவேண்டும்.
அதேபோன்று செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடன்கூடிய சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை முன்னிறுத்தி இந்திய அரசாங்கம் இயங்கவேண்டும்.
மேலும் இலங்கைவாழ் தமிழ்மக்களுக்கான நீதி, நல்லிணக்கம் மற்றும் அரசியல் உரிமைகள் என்பன உறுதிசெய்யப்படுவதில் இந்தியா வழங்கிவரும் நீண்டகால ஆதரவு இன்னமும் வலுவாகத் தொடரவேண்டும்.
இந்திய வெறுமனே பிராந்திய ஒத்துழைப்புக்காக மாத்திரமன்றி, எல்லைகள் கடந்து தமிழ்மக்களுக்கான உண்மை, நீதி மற்றும் கௌவரம் என்பவற்றுக்காகவும் முன்நிற்கவேண்டுமென அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது,