ரோஹிதவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டு பயணத் தடை
விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட ரசிக விதான, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொசெல் மெலனி அபேகுணவர்தனவிடமிருந்து ஜீப்பை வாங்கியதாகக் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் (வலான ஊழல் தடுப்புப் பிரிவு) கோரிக்கையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான, தவறான தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட ஜீப் தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
குறித்த ஜீப்பை ஆய்வு செய்ததில், அது சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, தவறான தரவுகளை சமர்ப்பித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை சேர்ந்த ஒருவர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஜகத் விதானவுக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தின் பெயரில் இரண்டாவது முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஜீப்பை, அவரது பிரதிநிதி பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட ரசிக விதான, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொசெல் மெலனி அபேகுணவர்தனவிடமிருந்து ஜீப்பை வாங்கியதாகக் கூறினார்.
அந்த வாக்குமூலத்திற்கு அமைய, கடந்த 19 ஆம் திகதி மதியம் களுத்துறை, நாகொடவில் உள்ள ரொசெல் மெலனி அபேகுணவர்தனவின் வீட்டிற்கு பொலிஸார் சென்ற போதும், அவரும் அவரது கணவரும் அங்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டு பயணத் தடையை மதுகம நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.