தமிழ் மக்களுக்கு காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பேன்: ஜனாதிபதி அநுர
இலங்கையில் தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்துக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் இனி ஏற்படாத வகையில் நாட்டை நிர்வகிப்பது எமது பிரதான நிலைப்பாடாகும்.

யுத்தத்தால் வடக்கு மாகாணம் தான் மிக மோசமாக அழிவடைந்தது.அந்த மக்கள் கொடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.இதுவே உண்மை.வடக்கு மக்கள் அமைதியாகவும்,நிம்மதியாகவும் வாழவே விரும்புகிறார்கள். ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கு மாகாணத்தில் தான் அதிகளவில் இராணுவத்தினர் உள்ளனர். பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படும்.இதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.அரசியலமைப்பு ரீதியில் தமிழ் மக்களுக்கு காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பேன்.தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (28) பிற்பகல் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை டோக்கியோவில் சந்தித்து உரையாடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். வடக்கில் உள்ள இளைஞர்கள் மீண்டும் ஆயுதமேந்துவார்கள்,ஆகவே அங்கு பாதுகாப்பபை பலப்படுத்த வேண்டும் என்று ஒருசில அரசியல்வாதிகள் கருதுகிறார்கள். நாட்டில் யுத்தம் தோற்றம் பெறாமல் இருக்கும் வகையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு நாங்கள் செயற்படுகிறோம்.
இலங்கையில் தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்துக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் இனி ஏற்படாத வகையில் நாட்டை நிர்வகிப்பது எமது பிரதான நிலைப்பாடாகும். யுத்தத்தினால் வடக்கு மாகாணமே மிக மோசமாக அழிவடைந்தது.வடக்கில் 30 ஆண்டுகளும் யுத்தமே நிலவியது.
இதுவே உண்மை;.அந்த மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள்.ஆகவே வடக்கு மக்கள் மீண்டும் யுத்தம் பற்றி சிந்திக்கமாட்டார்கள். அமைதியாக வாழ்வதற்கே அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் தெற்கு அரசியல்வாதிகள் வடக்கில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறும் என்று எண்ணுகிறார்கள்.
பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு சபையே தீர்மானங்களை எடுக்கிறது. அடிப்படை காரணிகளை கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படுகிறது. ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கு மாகாணத்தில் தான் அதிகளவில் இராணுவத்தினர் உள்ளனர்.ஆகவே பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படும்.
இதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. நாட்டில் யுத்தம் ஒன்று தோற்றம் பெறாத வகையிலும், பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையிலும் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான நவடிக்கைகளையே நாங்கள் மேற்கொண்டுள்ளோம். 30 ஆண்டுகால யுத்தத்தின் போது தெற்கில் ஏதேனும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் வடக்கில் எவ்வித அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவில்லை.இதுவே உண்மை.
வடக்கில் சுத்தமான குடிநீர் 6 சதவீதமானோருக்கு மாத்திரமே கிடைக்கப்பெறுகிறது.வடக்கு மாகாண அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.இதில் என்ன பிரச்சினை உள்ளது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.தமிழ் மக்களுக்கு அரசியலமைப்பு ரீதியில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பேன்.தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்நாட்டு பிரஜைகள் என்ற அடிப்படையில் முழுமையாக உரிமைகளுடன் வாழும் சூழலை ஏற்படுத்திக்கொடுப்பேன்.
யுத்தம் மற்றும் கலவரங்கள் தோற்றம் பெறும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு நாட்டையும், தேசிய நல்லிணக்கத்தையும் மேம்படுத்த முடியாது. வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வினை பெற்றுக்கொடுப்போம்.அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.