சுமந்திரனின் ஹர்த்தால் திகதியில் மாற்றம்: திங்களன்று முடக்கத்துக்கு அழைப்பு
அவ்வழைப்புக்கு தாமும் ஆதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக்கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன அறிவித்திருந்தன.
வட, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் அனுட்டிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று மன்னார் மடுமாதா தேவாலய திருவிழா நிகழ்வு நடைபெறவிருப்பதனால், மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வருடனான ஆலோசனையின் பின்னர், நல்லூர் முருகன் ஆலயத் திருவிழா நிகழ்வுகளையும் அனுசரித்து எதிர்வரும் திங்கட்கிழமையன்று (18-08-2025) ஹர்த்தால் தினத்தை அனுட்டிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
வட, கிழக்கு மாகாணங்களில் தொடரும் அதிகளவிலான இராணுவப் பிரசன்னத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று (15-08-2025) அவ்விரு மாகாணங்களும் முழுமையாக முடங்கும் வகையில் ஹர்த்தால் அனுட்டிக்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சகல தரப்பினருக்கும் அழைப்புவிடுத்திருந்தார்.
அவ்வழைப்புக்கு தாமும் ஆதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக்கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன அறிவித்திருந்தன.
அதனைத்தொடர்ந்து அன்றைய தினம் நடைபெறவிருக்கும் மன்னார் மடுமாதா தேவாலய திருவிழா மற்றும் நல்லூர் திருவிழா நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்பதற்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவேண்டாம் எனவும் சுமந்திரன் வேண்டுகோள்விடுத்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது மேற்படி ஹர்த்தாலை பிற்போடுவது குறித்து அவரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வட, கிழக்கு முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று ஹர்த்தால் அனுட்டிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மடுமாதா தேவாலயத்தில் அன்றைய தினம் விசேட நிகழ்வு நடைபெறவிருப்பதனால், ஹர்த்தால் அனுட்டிப்பதற்கான தினத்தை வேறொரு திகதிக்கு மாற்றுமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் அடிகளார் வேண்டுகோள்விடுத்திருந்தார்.
இந்நிலையில் 11-08-2025 அன்று மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் பின்னர் இந்தத் திகதியை மாற்றுவதென்று தீர்மானிக்கப்பட்டது.
இம்மாற்றத்தை அடுத்து நல்லூர் கோவில் திருவிழா நிகழ்வுகளையும் அனுசரித்து, ஹர்த்தால் அனுட்டிப்பதற்கான திகதியை எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு மாற்றுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு வட, கிழக்கு முழுவதையும் முடக்கித் தமது எதிர்ப்பைப் பாரியளவில் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





