13ஐ நடைமுறைப்படுத்த இரட்டை வேடம் போடோம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறான கொள்கையை ஒருபோதும் பின்பற்றாது. மாறாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தும்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முடிவுகளால் அச்சமடைந்துள்ள தற்போதைய அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலைத் திட்டமிட்டுப் பிற்போடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒற்றையாட்சி ஆகியவற்றைப் பாதுகாத்து, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் '13 பிளஸ்' அல்லது '13 மைனஸ்' என்று சர்வதேசத்திற்கு ஒரு கதையையும், உள்நாட்டில் ஒரு கதையையும் கூறி இரட்டை வேடமிட்டுக் கொண்டிருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறான கொள்கையை ஒருபோதும் பின்பற்றாது. மாறாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தும்.
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி தேசிய செயற்குழுவொன்று அமைக்கப்படும். மாகாண சபைகள் என்பது 'வெள்ளை யானைகள்' அல்ல. கடந்த காலங்களில் முதலமைச்சர்கள் சர்வதேச முதலீடுகளை ஈர்த்துப் பெரும் சேவையாற்றியுள்ளனர். அவ்வாறிருக்கையில் தற்போது மாகாண சபைகளை நிராகரிப்பவர்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.
பொதுத்தேர்தலின் பின்னர் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்திற்கு 23 இலட்சம் வாக்குகள் வரை குறைவடைந்துள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பயந்து கிராமங்களுக்கு செல்ல முடியாமல் முடங்கியுள்ளது. எனவே எந்தவொரு தரப்பிற்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஐக்கிய மக்கள் சக்திக்கும் அத்தகைய வரம்பற்ற அதிகாரம் தேவையில்லை. சாதாரண பெரும்பான்மையே போதுமானது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் கிடைக்கும் போது ஆட்சியாளர்கள், மக்களை அநாதரவாக்கித் தங்களது சுயநலத்திற்காக மட்டுமே முடிவுகளை எடுப்பார்கள். மக்களின் வறுமையையும் துயரத்தையும் விற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இன்று சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருகிறது. எனவே, மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.





