ஷிரான் பாஷிக்கின் தந்தைக்கு மீண்டும் விளக்கமறியல்
வெளிநாட்டில் தங்கியுள்ள குறித்த சந்தேகநபர் நாட்டிற்கு வருகை தரும் தருணத்தில் அவரைக் கைது செய்யுமாறு நீதிவான் இதன்போது பிடியாணை பிறப்பித்திருந்தார்.
டுபாயிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் என அறியப்படும் மொஹமட் ஷிரான் பாஷிக்கின் தந்தை அப்துல் ரஸாக் மொஹமட் பாஷிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் 25-09-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட து. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஷிரான் பாஷிக்குக்கு சொந்தமான பணத்தை நாட்டுக்கு கொண்டுவந்தமை மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்துடன் தொடர்புடைய, மேலதிக வகுப்பு ஆசிரியரான சம்பத் அத்தடகே என்பவரும் இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்.
அதற்கமைய, வெளிநாட்டில் தங்கியுள்ள குறித்த சந்தேகநபர் நாட்டிற்கு வருகை தரும் தருணத்தில் அவரைக் கைது செய்யுமாறு நீதிவான் இதன்போது பிடியாணை பிறப்பித்திருந்தார். ஷிரான் பாஷிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் 3 கோடி ரூபா பணத்தைப் பயன்படுத்தி, கம்பஹா பகுதியில் உள்ள சொகுசு வீடொன்றை தனது பெயரில் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்கு அமையவே அப்துல் ரஸாக் மொஹமட் பாஷிக் கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி மத்திய குறறப் புலனாய்வுப் பணியகம் கைது செய்யப்பட்டார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விடுத்திருந்த அழைப்பாணைக்கமைய, முன்னிலையாகிய சந்தேகநபரிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.





