கடந்தகால தவறுகளில் இருந்து கற்ற பாடங்களுடன் கட்சி முன்னோக்கி பயணிக்கும் - நாமல் எம்.பி
தமிழ், சிங்கள புத்தாண்டு என்பது எமது பொதுவான கலாசார பாரம்பரியம் எனவும், அதனைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கடத்துவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
எமது கட்சி கடந்தகால தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன் முன்நோக்கிப் பயணிக்கும் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இப்பயணத்தில் குறிப்பாக சுயபரிசீலனை, கலாசாரப் பாதுகாப்பு மற்றும் இளைஞர் வலுவூட்டல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
கார்ல்டன் இல்லத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற தமிழ், சிங்களப் புதுவருடக் கொண்டாட்ட நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ், சிங்கள புத்தாண்டு என்பது எமது பொதுவான கலாசார பாரம்பரியம் எனவும், அதனைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கடத்துவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை தற்போது நாடு ஒரு சவாலான காலகட்டத்துக்கு முகங்கொடுத்திருக்கின்ற போதிலும், ஒற்றுமை மற்றும் நேர்மறைக் கண்ணோட்டத்துடன் அணுகுவதன் மூலம் அச்சவாலை முறியடிக்கமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர், 'ஒவ்வொருவரும் தவறு இழைக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னோக்கிப் பயணிக்கவேண்டும்' எனச் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று அண்மையகாலங்களில் இளைஞர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது பற்றிக் கவலை வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ, இளைய தலைமுறையினரை உரியவாறு வழிநடத்தவேண்டியதன் அவசியம் குறித்தும், தேசிய அபிவிருத்தியில் அவர்கள் பங்களிப்புச் செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார். நாட்டின் வரலாற்றில் பதிவான அமைதியற்ற சூழ்நிலைகள் உள்ளடங்கலாக ஒருசில சம்பவங்களை முன்மாதிரியாகக்கொண்டு ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தையும் எடைபோடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இளைஞர்களின் திறமைகளை ஊக்குவித்து அவற்றைப் பயன்படுத்துவதிலும், தேசிய ஒருமைப்பாட்டைப் பலப்படுத்துவதிலுமே நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.





