சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன: அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
ஊழல், மோசடிகள் குறைவடைந்து வருகின்றன. மறுபுறம் பொருளாதாரமும் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு பேசு பொருட்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போது அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. அந்த அச்சத்தையே கூச்சலிட்டு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் அவற்றை கவனத்தில் கொள்ளாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
26-02-2026 அன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு பேசு பொருட்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு கொள்கலன்கள் பற்றிக் கூறிக் கொண்டிருந்தனர். அவ்வாறு காலத்துக்கு காலம் ஒவ்வொரு விடயங்களை அவர்கள் பேசு பொருளாக்கி அரசாங்கத்தின் மீது குற்றஞ்சுமத்திக் கொண்டிருப்பார்கள். எவ்வாறிருப்பினும் அவர்களால் முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் நாம் பாராளுமன்றத்தில் பதிலளித்திருக்கின்றோம்.
நிலக்கரி விவகாரம் தொடர்பில் தேவையான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை. நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த ஆட்சி காலங்களில் இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது அவை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கல் காணப்பட்டது. காரணம் அவற்றில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டன. ஆனால் தற்போது அவ்வாறில்லை. நீதித்துறை சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. எனவே ஆளும், எதிர்க்கட்சி என்ற பேதமின்றி எவரும் சட்டத்தை நாட முடியும். எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களால் நாம் பதற்றமடைவதில்லை.
அண்மையில் சமையல் எரிவாயு பிரச்சினை ஏற்பட்டது. எனினும் மிகக் குறுகிய காலத்துக்குள் அந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்கியுள்ளோம். மக்கள் மத்தியில் எமது அரசாங்கத்தின் மீதான செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஊழல், மோசடிகள் குறைவடைந்து வருகின்றன. மறுபுறம் பொருளாதாரமும் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் வெற்றிகரமான பயணத்தில் எதிர்க்கட்சிகளின் அரசியலுக்கான வாய்ப்புக்கள் குறைந்து வருகின்றன. சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போது அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. அந்த அச்சத்தையே கூச்சலிட்டு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்றார்.





