சிறுமியை நான் விலைமாதுவென அழைக்கவில்லை: திலும் அமுனுகம
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தமக்கு கிடைத்த ஆரம்பக்கட்ட தகவல்களின் அடிப்படையிலேயே நான் பதிலளித்தேன்
அனுராதபுரத்தின் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவுடன் தொடர்புபடுத்தி, குறிப்பிட்ட சிறுமி ஒருவரை நான் விலைமாது என அழைத்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம மறுப்பு தெரிவித்துள்ளார்.
கட்சியின் காரியாலயத்தில் 21-05-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தமக்கு கிடைத்த ஆரம்பக்கட்ட தகவல்களின் அடிப்படையிலேயே நான் பதிலளித்தேன் அதனை சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தவறான முறையில் திசை திருப்பி, அந்த சிறுமிக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து எனக்கு கிடைத்த தகவல்களின்படி, நிட்டம்புவ பகுதியில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.. அந்த வாக்குமூலத்தை தொடர்ந்தே குறிப்பிட்ட பிக்கு கைது செய்யப்பட்டார் என்ற தகவலையே நான் ஊடக சந்திப்பில் பகிர்ந்துகொண்டேன்
நான் எவ்வித ஆதாரமுமற்ற செய்திகளை பரப்புவதற்காக ஊடகவியலாளர் சந்திப்பைக் கூட்டவில்லை. அன்று காலை நடைபெற்ற இராணுவ வீரர்கள் நினைவேந்தல் தின நிகழ்வுகள் குறித்து பேசுவதற்கே அந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசியல் தளத்தில் எனக்கு எதிராக சேறுபூசும் குழுக்கள் இயங்கி வருகிறது. தமது இந்த கருத்து தவறான புரிதலால் அந்த சிறுமிக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த இருபது வருட அரசியல் வாழ்க்கையில் நான் எவருக்கும் எதிராக இழிவான கருத்துக்களை வெளியிட்டதில்லை என்றார்.





