அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறை மீளாய்வு
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது,
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய பல்வேறு அரச துறைகளில் 26,095 ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங் கண்டு அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது,
குறித்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களால், அவற்றின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு, குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 442, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 452, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 705, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 10, பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 37, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 76, பாதுகாப்பு அமைச்சுக்கு 102, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சுக்கு 19, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 10 ஆட்சேர்ப்புக்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு 01, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 166, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு 167, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சுக்கு 33, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 50, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கு 23, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு 248, மத்திய மாகாண சபைக்கு 203, வடமத்திய மாகாண சபைக்கு 06, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு 01 மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைக்கான ஆசிரியர்கள் 23,344 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





