ஜப்பானில் 6.9 ரிக்டர்அளவில் நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியூஷூ பிராந்தியத்தில் திங்கள்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையத்தை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இரண்டு மாகாணங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அவை கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டன.
மியாசாகி மாகாணத்தில் இரவு 9:19 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜப்பானிய அளவில் 0 முதல் 7 வரை 5 ஆக தீவிரம் இருந்ததாகவும் ஜப்பான் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
மியாசாகி மற்றும் கொச்சியின் தெற்கு மாகாணங்களுக்கு அதிகபட்சமாக ஒரு மீட்டர் (3.3 அடி) உயர அலைகளுக்கான சுனாமி எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. 20 சென்டிமீட்டர் (7.8 அங்குலம்) சுனாமி பின்னர் மியாசாகி நகரத்தை அடைந்ததாக என்.எச்.கே தெரிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கைகள் அனைத்தும் நள்ளிரவை நெருங்கியே விலக்கிக் கொள்ளப்பட்டன.