காலிஸ்தான் நிதி விவகாரம்: அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்ஐஏ விசாரணை நடத்தத் துணைநிலை ஆளுநர் பரிந்துரை
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்து, இது கெஜ்ரிவாலுக்கு எதிரான "மற்றொரு சதி" என்று கூறினார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி அரசு தடை செய்யப்பட்ட அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி குழுவான 'நீதிக்கான சீக்கியர்கள்' அமைப்பிடமிருந்து நிதியுதவி பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தேசியப் புலனாய்வுத் துறை விசாரணைக்குத் தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பரிந்துரைத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்து, இது கெஜ்ரிவாலுக்கு எதிரான "மற்றொரு சதி" என்று கூறினார்.
துணைநிலை ஆளுநர் செயலகத்தின் கூற்றுப்படி, 1993 தில்லி குண்டுவெடிப்பு குற்றவாளியும் பயங்கரவாதியுமான தேவேந்திர பால் புல்லரை விடுவிக்க உதவியதற்காகவும், காலிஸ்தான் சார்பு உணர்வுகளை ஆதரித்ததற்காகவும் காலிஸ்தான் ஆதரவு குழுக்களிடமிருந்து ஆம் ஆத்மி கட்சி 16 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றதாகச் சக்சேனாவுக்கு புகார் வந்தது.
“ஒரு முதலமைச்சருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாலும், தடைசெய்யப்பட்ட அமைப்பிடமிருந்து பெறப்பட்ட அரசியல் நிதி தொடர்பானது என்பதாலும், புகார்தாரர் முன்வைத்த மின்னணு ஆதாரங்களுக்கு தடயவியல் பரிசோதனை உட்பட விசாரணை தேவை" என்று அவர் கூறினார்.
2014 ஜனவரியில் இக்பால் சிங் என்பவருக்கு கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், "ஆம் ஆத்மி அரசு ஏற்கனவே புல்லரை விடுவிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதாகவும், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பது உள்ளிட்ட பிற பிரச்சினைகளில் அனுதாபத்துடனும் காலக்கெடுவுடனும் செயல்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.