அதானி காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை: மின்துறை அமைச்சர்
கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் இந்த விடயம் தொடர்பில் பதில் எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து மேற்கொள்ளவிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்று மின்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
தனது தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் மின்சாரம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது குறித்த திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் குமார ஜயகொடி, அதானி நிறுவனத்தின் மின் திட்டத்தின் விலை அதிகமாக இருப்பதால், இந்த விடயம் அமைச்சரவையின் மீள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த நேரத்தில், இந்தியாவின் அதானி குழுமத்தின் தாய் நிறுவனம், இந்த திட்டத்தில் இருந்து விலகுவதாக இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியதாகவும், அதன்படி, முதலீட்டு வாரியம் இது குறித்து அமைச்சகத்திற்கு அறிவித்ததாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், காற்றாலை மின் திட்டம் தொடர்பில் சிரிழங்காவிலுள்ள அதானி நிறுவனத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும், எனவே இந்த விடயம் குறித்து பரிசீலிக்குமாறு அந்த நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் இந்த விடயம் தொடர்பில் பதில் எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.