கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
அமலாக்க இயக்குநரகம் வழங்கிய தகவல்களின்படி, கெஜ்ரிவால் "மற்றவர்களுடன் சதி செய்தார்" என்றும், குற்றத்தின் வருமானத்தைப் பயன்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார் என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
கலால் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் தன்னை கைது செய்ததை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. இதன் விளைவாக, அமலாக்க இயக்குநரகம் மதுபானக் கொள்கை வழக்கின் 'கிங்பின்' என்று பெயரிட்ட கெஜ்ரிவால், தில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி, ஏப்ரல் 15 வரை திகார் சிறையில் இருப்பார்.
அமலாக்க இயக்குநரகம் வழங்கிய தகவல்களின்படி, கெஜ்ரிவால் "மற்றவர்களுடன் சதி செய்தார்" என்றும், குற்றத்தின் வருமானத்தைப் பயன்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார் என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
இப்போது செயலிழந்த மதுபானக் கொள்கையை வகுப்பதிலும், கையூட்டு கோருவதிலும் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட ஈடுபாட்டையும் நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. கூடுதலாக, ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளராக, கெஜ்ரிவால் ஊழல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
"கோவா தேர்தலுக்காக அவருக்கு ரொக்கமாக பணம் வழங்கப்பட்டதாக 'ஹவாலா' பொருள் மற்றும் ஒப்புதல் வாக்குமூலங்கள் வடிவில் போதுமான ஆவணங்களை அமலாக்க இயக்குநரகத்தால் வைக்க முடிந்தது. கோவா தேர்தலுக்காக பணம் ரொக்கமாக அனுப்பப்பட்டது. கைது சட்டத்திற்கு முரணானது அல்ல, நீதிமன்றக் காவல் சட்டவிரோதமானது என்று கூற முடியாது" என்று நீதிபதி ஸ்வரனா காந்த சர்மா தீர்ப்பை வழங்கும்போது கூறினார்.
“மத்திய விசாரணை அமைப்பின் தரப்பில் எந்தவொரு தீய நோக்கமும் இல்லாத நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நேரத்தை கெஜ்ரிவால் சவால் செய்வது நிலைக்காது" என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தில்லி முதல்வர் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நேரத்தைப் பொருட்படுத்தாமல், சட்டத்தின்படி அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என்பதை நீதிமன்றம் ஆராய வேண்டும் என்றும் அது சுட்டிக்காட்டியது.
காணொலிக்காட்சி மூலம் கெஜ்ரிவாலை விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. விசாரணை எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை குற்றம் சாட்டப்பட்டவர் முடிவு செய்ய முடியாது. குற்றம் சாட்டப்பட்டவரின் வசதிக்கு ஏற்ப இருக்க முடியாது. இந்த நீதிமன்றம் இரண்டு வகையான சட்டங்களை அமைக்காது - ஒன்று பொது மக்களுக்கானது, மற்றொன்று பொது ஊழியர்களுக்கு. முதல்வர் உட்பட யாருக்கும் எந்த குறிப்பிட்ட சலுகையும் இருக்க முடியாது" என்று உயர் நீதிமன்றம் மேலும் கூறியது.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதனன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.