கடந்த காலத் தவறுகளைச் சரிசெய்து பன்னாட்டு நாணய நிதியத்தின் இலக்குகளை விஞ்சுவோம்: ஜனாதிபதி நம்பிக்கை
நாட்டின் பொருளாதாரம் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து இளைஞர்கள் எழுப்பியுள்ள கவலைகளை நிவர்த்தி செய்ய கூட்டு முயற்சியின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுடனான சந்திப்பின் போது, அரசாங்கத்தின் கொள்கை வேலைத்திட்டத்தை முறையாக அமல்படுத்துவதன் மூலம் பன்னாட்டு நாணய நிதியத்தின் இலக்குகளை விஞ்சிப் பொருளாதாரச் செழிப்பை ஏற்படுத்துவோம் என நம்பிக்கை வெளியிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து இளைஞர்கள் எழுப்பியுள்ள கவலைகளை நிவர்த்தி செய்ய கூட்டு முயற்சியின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வளமான பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அமைச்சுச் செயலாளர்கள் தமது அதிகார வரம்பிற்குட்பட்ட நிறுவனங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தினார்.
மாகாண சபைகளின் மூலதனச் செலவுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான வரவிருக்கும் ஒழுங்குமுறைகளையும், அடுத்த சில மாதங்களுக்குள் உள்ளூராட்சி மட்டத்தில் மின்சார விநியோகம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் எடுத்துரைத்தார்.