ஹரியானா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திரும்பப் பெற்றனர்
சைனி அரசாங்கத்தில் சேர்க்கப்படாததால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹரியானாவில் நயாப் சிங் சைனி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்று, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் மாநிலக் காங்கிரஸ் தலைவர் உதய் பான் முன்னிலையில் ரோஹ்தக்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சோம்பீர் சங்வான், ரந்தீர் கோலன் மற்றும் தரம்பால் கோண்டர் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
“அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறோம். காங்கிரசுக்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோம். விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம், "என்று கோண்டர் கூறினார்.
சைனி அரசாங்கத்தில் சேர்க்கப்படாததால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், ஹரியானாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.