சர்க்கரை நோயின் அறிகுறிகள்
பொதுவாக சர்க்கரை நோய் ஒருவருக்கு வர மோசமான மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான்.
சர்க்கரை நோய் ஒரு நாள்பட்ட சுகாதார பிரச்சனையாகும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாமல் உடல் போராடும் போது எழுகிறது. இந்த பிரச்சனையானது கணையத்தால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது அல்லது உடலால் அதற்கு சரியாக பதிலளிக்க முடியாத போது ஏற்படுகிறது. இந்த சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை டைப்-1 மற்றும் டைப்-2.
பொதுவாக சர்க்கரை நோய் ஒருவருக்கு வர மோசமான மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான். இது தவிர மரபணுக்களும், வயதும் இதன் அபாயத்தை அதிகரிக்கின்றன. தற்போது இந்த சர்க்கரை நோயால் உலகில் மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
இந்த சர்க்கரை நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகரித்து அதன் விளைவாக சந்திக்கும் பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஆனால் இன்னும் பலருக்கு இரத்த சர்க்கரை நோயின் ஆரம்பகால அறிகுறிகள் சரியாக தெரிவதில்லை. கீழே ஒருவரது உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் காலையில் தெரியக்கூடிய சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதிகப்படியான தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது
சர்க்கரை நோயின் மிகவும் பொதுவான ஆரம்ப கால அறிகுறிகள் தான் அதிகப்படியாக தாகம் எடுப்பதும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதும். ஏனெனில் சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து அதிகப்படியான குளுக்கோஸை வடிகட்டுவதால் இது நிகழ்கிறது. அதிக நீரைக் குடிக்கும் போது, உடல் அதிகப்படியான சர்க்கரையை சிறுநீர் மூலம் அகற்ற முயற்சிக்கிறது. ஒரு கட்டத்தில் இது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது மற்றும் தாகத்தை அதிகரிக்கிறது. எனவே வழக்கத்தை விட அதிகமாக நீரைக் குடித்தாலோ மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தாலோ, தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
திடீர் எடை இழப்பு
சர்க்கரை நோயின் மற்றொரு அறிகுறி தான் திடீரென்று உல் எடை குறைவது. எப்போது உடல் க்ளுக்கோஸை பயன்படுத்த போராடுகிறதோ, அப்போது உடலானது ஆற்றலுக்காக கொழுப்புக்களையும், தசைகளையும் உடைத்து, உடல் எடையைக் குறைக்கிறது. எனவே திடீரென்று காரணமின்றி உடல் எடை குறைந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனம்
இரவு நன்கு தூங்கி எழுந்தும், காலையில் மிகுந்த உடல் சோர்வையும், பலவீனத்தையும் உணர்ந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். எப்போது உடலால் ஆற்றலுக்காக க்ளுக்கோஸை பயன்படுத்த முடியாமல் போகிறதோ, அப்போது உடல் பலவீனமாக தினசரி நடவடிக்கைகளை கூட மேற்கொள்ள முடியாத அளவில் சோர்வுடன் இருக்கும். எனவே இந்த அறிகுறியை அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மங்கலான பார்வை
சர்க்கரை நோயின் மற்றொரு அறிகுறி தான் மங்கலான பார்வை. உடலில் இரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் போது, கண்களில் உள்ள லென்ஸ்களில் வீக்கம் ஏற்பட்டு, அதன் விளைவாக பார்வை மங்கலாக தெரியத் தொடங்கும். எனவே மங்கலான பார்வையுடன், சர்க்கரை நோயின் பிற அறிகுறிகளுள் ஒன்றை அனுபவித்தாலும், மருத்துவரை உடனே சந்தியுங்கள்.
சரும தொற்றுகள் மற்றும் காயங்கள் குணமாக தாமதமாவது
சர்க்கரை நோயைக் கொண்டவர்களின் சரும நிறத்தில் மாற்றங்களைக் காணக்கூடும். அதோடு இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சரும தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயமும் மற்றும் காயங்கள் ஏற்பட்டால் அவை குணமாக தாமதமும் ஆகும். ஆகவே இப்படியானா சரும தொற்றுகளுடன், காயங்கள் ஆறாமல் இருந்தால், உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பாருங்கள்.