புதுச்சேரியில் பழங்குடிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியின் போது தரையில் அமர வைத்ததால் பரபரப்பு
தரையில் அமர வேண்டிய கட்டாயத்தில் இருந்த பழங்குடிகள், தங்களை கவுரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தனர்.

புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஜன்ஜாதிய கவுரவ் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் தரையில் அமர வைக்கப்பட்டனா்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 300 பேர் மட்டுமே அமரக்கூடிய இந்த அரங்கம் அரசு அதிகாரிகளால் நிரம்பியதாகவும், சுமார் 50 பழங்குடியினச் சமூக உறுப்பினர்கள் அமர இடமின்றி தவித்ததாகவும் கூறப்படுகிறது.
தரையில் அமர வேண்டிய கட்டாயத்தில் இருந்த பழங்குடிகள், தங்களை கவுரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் உடனடியாக மலைவாழ் மக்களுக்கு நாற்காலிகள் வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். சுமார் 15 நிமிட அமைதியின்மைக்குப் பிறகு, நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியது.
புதுச்சேரி தமிழிசை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த சம்பவம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.