சர்வாதிகாரம்: மல்யுத்த வீரர்களுக்கு எதிரான எஃப்ஐஆர் குறித்து சாக்ஷி மாலிக் ஏமாற்றம் தெரிவித்தார்
கலவரம் செய்ததற்காகவும், கடமையைச் செய்ய இடையூறு விளைவித்ததற்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டார்.

ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருடன் அணிவகுத்துச் செல்லும் போது, கலவரம் செய்ததற்காகவும், கடமையைச் செய்ய இடையூறு விளைவித்ததற்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டார்.
இந்திய மல்யுத்தச் சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய ஏழு நாட்கள் ஆன நிலையில், வழக்கு பதிவு செய்ய ஏழு மணி நேரம் கூட ஆகவில்லை என்று தில்லி காவல்துறையைச் சாக்ஷி மாலிக் டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.
“சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷண் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய தில்லிக் காவல்துறைக்கு 7 நாட்கள் ஆனது. ஆனால் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதற்காக எங்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய 7 மணிநேரம் கூட ஆகவில்லை. இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்து விட்டதா? அரசாங்கம் தனது வீரர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது,” என்று அவர் எழுதினார்.