அடுத்த இரண்டு மாதங்களில் கடன் மறுசீரமைப்பில் சிறிலங்கா மேலும் முன்னேற்றம் காணும் – சேமசிங்க
"கடந்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்பதற்கு இது சான்றாகும், மேலும் இந்த சீர்திருத்த வேகத்தை பராமரிக்க வேண்டியது அவசியம்" என்று அவர் மேலும் கூறினார்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு அதன் அடுத்த கட்ட நிதியை விடுவிப்பதற்கு இயலும் நோக்கில், பன்னாட்டு நாணய நிதியத்தின் சில வேலைத்திட்ட முன்கூட்டிய நடவடிக்கைகளை நிறைவு செய்யும் அதேவேளை, அடுத்த இரண்டு மாதங்களில் சிறிலங்கா கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நேற்று (21) விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாட்டை சிறிலங்கா அதிகாரிகள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் தூதுக்குழு எட்டுவது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், நிதி ஒருங்கிணைப்பு, நாணயக் கொள்கை, நிதியியல் துறை உறுதிப்பாடு மற்றும் ஆளுகை ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய சீர்திருத்தங்களில் சிறிலங்கா அடைந்துள்ள வலுவான முன்னேற்றத்தை இது பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
மேலும், 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 4.5% பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதால், பொருளாதார நிலைத்தன்மையிலிருந்து வளர்ச்சிக்கு மாறுவதற்கான அறிகுறிகள் உருவாகி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
"கடந்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்பதற்கு இது சான்றாகும், மேலும் இந்த சீர்திருத்த வேகத்தை பராமரிக்க வேண்டியது அவசியம்" என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், இந்த சீர்திருத்தங்களின் எந்தவொரு சறுக்கலும் அல்லது மாற்றமும் பொருளாதார மீட்சியை விரைவாக தளர்த்துவதற்கு அச்சுறுத்துகிறது, மேலும் அனைத்து இலங்கையர்களின், குறிப்பாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் நல்வாழ்வை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.