வெறிபிடித்த காளையர்கள் ஈவிரக்கமின்றி இனவழிப்பினை செய்தார்கள்-

உண்பதற்கு உணவின்றி அலைந்து திரிந்த மக்களை எந்த விதமான வேறுபாடுகளும் இன்றி கொத்து கொத்தாக குண்டு மழை பொழிந்து இனப்படுகொலை செய்ததை நினைவு கூறுவதே வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி என்று யாழ்மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக 'வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கும் செயற்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
அதன் பொழுது கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில்,
இன்று வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆரம்பமாகின்றது. அந்த வகையில் இன்று தொடக்கம் 18 ஆம் திகதி வரை இந்த கஞ்சி வழங்கும் செயற்திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளோம்.
ஆகவே, இந்த வலி நிறைந்த கஞ்சியினை ஒவ்வொரு ஊர் ஊராக சென்று கஞ்சியினை காய்ச்சி வழங்கவுள்ளோம்.
சாப்பிட வழிகளின்றி பசியினால் சிரட்டையை ஏந்தியவாறு உணவுக்காக வரிசைகளில் அலைந்து திரிந்த லட்ச கணக்கான மக்களை கொத்து கொத்தாக குண்டுகளை போட்டு இனபடுகொலை செய்துள்ளனர்.
உப்பு, தேங்காய் பால் என்று எதுவுமின்றி ஆக்கிய கஞ்சியினை வாங்குவதற்காக பாடுபட்ட எமது மக்களை சிறுவர்கள், வளந்தவர்கள் மற்றும் முதியவர்கள் என்று எந்த விதமான வேறுபாடுகளுமின்றி இனப்படுகொலை செய்துள்ளனர். அவ்வாறு கொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைவு கூறும் நாளே இந்த நாள். வெறிபிடித்த காளையர்கள் இன அழிப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இவற்றை எல்லாமே எமது இளம் சமூகத்திற்கும், மக்களிற்கு தெரியப்படுத்தி இந்த வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கவுள்ளோம். ஆகவே இந்த செயற்திட்டத்திற்கு மக்களாகிய நீங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்