விமர்சனங்களை பற்றி இம்மியளவும் கவலைப்படுவதில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விமர்சனங்களை பற்றி இம்மியளவும் கவலைப்படுவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, கடந்த 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றது. இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,பொன்முடி, தங்கம் தென்னரசு, சாமிநாதன், ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்கு அளிக்காதவர்களுக்குமான ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்றார். கடந்த 2 ஆண்டுகளாக அளித்து வந்த ஒத்துழைப்பை, 3-ஆம் ஆண்டிலும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.