2030 ஆம் ஆண்டளவில் 70% மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சிறிலங்காவின் அர்ப்பணிப்புக்கு அமெரிக்கா பாராட்டு
"2030 ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சிறிலங்காவின் உறுதிப்பாட்டையும், உலகளாவிய காலநிலை முயற்சிகளில் அதன் செயலூக்கமான பங்கையும் நாங்கள் பாராட்டினோம்" என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் 'எக்ஸ்' (முன்னர் ட்விட்டர்) இல் ஒரு பதிவில் தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டளவில் 70% மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சிறிலங்காவின் அர்ப்பணிப்பையும் உலகளாவிய காலநிலை முன்னெடுப்புகளில் அதன் செயலூக்கமான பங்களிப்பையும் அமெரிக்கா பாராட்டியுள்ளது.
சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்குடன் சிறிலங்காவுக்கு உத்தியோகபூர்வ வருகை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் சமுத்திரங்கள் மற்றும் பன்னாட்டுச் சுற்றாடல் மற்றும் விஞ்ஞான விவகாரங்களுக்கான பதில் உதவி செயலாளர் ஜெனிபர் லிட்டில்ஜோன் அவர்கள் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோருடன் புதன்கிழமை (21) தனித்தனியாக சந்திப்புக்களை நடத்தினார்.
"2030 ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சிறிலங்காவின் உறுதிப்பாட்டையும், உலகளாவிய காலநிலை முயற்சிகளில் அதன் செயலூக்கமான பங்கையும் நாங்கள் பாராட்டினோம்" என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் 'எக்ஸ்' (முன்னர் ட்விட்டர்) இல் ஒரு பதிவில் தெரிவித்தார்.
மின்சாரத் துறை மறுசீரமைப்பு மற்றும் சிறிலங்காவின் தனித்துவமான இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக ஸ்மித்சோனியன் நிறுவனத்துடன் சாத்தியமான ஒத்துழைப்பு உள்ளிட்ட பன்னாட்டு அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிலையத்தின் (யு.எஸ்.ஏ.ஐ.டி) பணிகள் உட்பட தற்போதைய அமெரிக்க ஆதரவு குறித்து அவர்கள் விவாதித்ததாக அவர் கூறினார்.
"சுற்றாடல் சவால்களை சமாளிப்பதற்கும் பசுமையான, மிகவும் நெகிழ்திறன் கொண்ட எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் சிறிலங்காவுக்கு உதவுவதற்காக சமீபத்திய அறிவு, தொழில்நுட்பம் மற்றும் வளங்களை வழங்குவதன் மூலம் அமெரிக்கா ஒரு உறுதியான பங்காளியாக உள்ளது" என்று தூதுவர் சுங் தெரிவித்தார்.