காரைநகர் படகுத்துறையை புனரமைக்க இந்தியா நிதியுதவி
அப்போதைய சிறிலங்கா உயர்ஸ்தானிகர் க்ஷேனுகா திரேனி செனவிரத்ன ஆகியோர் 2024 டிசம்பர் 16 ஆம் திகதி கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.
வட மாகாணத்தில் அமைந்துள்ள காரைநகர் படகுத்தளத்தை புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கத்தின் 290 மில்லியன் ரூபா நன்கொடை உதவியுடன் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிறிலங்காவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ்ஜா மற்றும் இந்தியாவுக்கான அப்போதைய சிறிலங்கா உயர்ஸ்தானிகர் க்ஷேனுகா திரேனி செனவிரத்ன ஆகியோர் 2024 டிசம்பர் 16 ஆம் திகதி கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்ட மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் பெருங்கடல்வளங்கள் அமைச்சின்கீழ் இயங்கும் சீ-நோர் அறக்கட்டளை நிறுவனத்தின் காரைநகர் படகுத் தளத்தைப் புனரமைக்க இந்த திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் கட்டுமானப் பணிகள் மற்றும் கொள்முதல், ஆலை, இயந்திரங்கள், உபகரணங்கள், மூலப்பொருட்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தவுடன், புனரமைக்கப்பட்ட படகுத் தளம் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும். படகுத்துறையைச் சுற்றியுள்ளசிறிய நிறுவனங்கள் உட்பட இப்பகுதியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், மேலும் தரமான மீன்வள பொருட்களின் விநியோகத்தை அதிகரிக்க உதவும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அபிவிருத்தி ஒத்துழைப்பு இலாகாவுடன், கிட்டத்தட்ட அனைத்து முக்கிய துறைகளிலும் இந்தியாவின் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி உதவி முயற்சிகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள சிறிலங்கா மக்களின் அன்றாட வாழ்க்கையில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணத்தில் குறிப்பிடத்தக்க கடந்த காலதிட்டங்களில் 41000 க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவை அடங்கும்; நல்லிணக்கத் திட்டமாக யாழ்ப்பாணத்தில் அதிநவீன கலாசாரமையம்; காங்கன்சன்துறை துறைமுகத்தில் இடிபாடுகளை அகற்றுதல் மற்றும் தூர்வாருதல்; யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பூராவும் உள்ள பல பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளில் நிர்மாணம் மற்றும் திருத்த வேலைகள்; திருக்கேதீஸ்வரம் கோவில் புனரமைப்பு; விவசாய சமூகத்திற்கும், படகுகள், வலைகள், வெளிப்பொருத்தும் மோட்டார்கள், உறைவிப்பான் உள்ளிட்ட மீனவ சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க அளவு உதவிகளை விநியோகித்தல்; மற்றும் இன்ன பிறவற்றைகள் என்று அறிக்கையானது எடுத்துக்காட்டியது.