சீனாவுடனான சிறிலங்காவின் கடன் உடன்படிக்கையின் விதிமுறைகள் ஏனைய கடன் வழங்குநர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன: அறிக்கை
330 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு பன்னாட்டு நாணய நிதியம் அனுமதி வழங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கொழும்பில் வியாழக்கிழமை வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீனக் கடன் உடன்படிக்கையின் விதிமுறைகளை அரசாங்கம் ஏனைய கடன் வழங்குனர்களுடன் பகிர்ந்து கொண்டதாக இலங்கை மத்திய வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான், இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் ஆஃப் நேஷன்ஸ் தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு சிறிலங்காவின் கடனை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தத்தை முன்மொழியும் என்று நம்புவதாக ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு பன்னாட்டு நாணய நிதியம் அனுமதி வழங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கொழும்பில் வியாழக்கிழமை வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடனான சிறிலங்காவின் சமீபத்திய கடன் ஒப்பந்தம் பன்னாட்டு நாணய நிதியத்தையும் இந்தியா போன்ற கடனாளி நாடுகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சில அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து கவலைகளை எழுப்பினர். சிறிலங்காவின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனா, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் ஒரு பகுதியாக இல்லை. 62 வயதான வீரசிங்க, சீன ஒப்பந்தத்தின் விவரங்கள் இப்போது கடன் வழங்குநர் குழு மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
"உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களும் தங்கள் ஆதரவுடன் பதிலளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் நாங்கள் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிதித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்" என்று அவர் கூறினார். அந்த பேட்டியில் சீன ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அவர் தெரிவிக்கவில்லை.