'மத சிறுபான்மையினர் யாரும் நாட்டில் பாதுகாப்பாக இல்லை': பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்
பாதிக்கப்பட்ட பலருக்கு மத நிந்தனை குற்றச்சாட்டுகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஆனால் தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் திங்களன்று நாட்டின் சிறுபான்மையினர் "மதத்தின் பெயரால் இலக்கு வைக்கப்பட்ட வன்முறையை" எதிர்கொள்கின்றனர் என்றும், அரசு அவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் ஒப்புக் கொண்டார்.
"சிறுபான்மையினர் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள்... பாகிஸ்தானில் எந்த மத சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு இல்லை. முஸ்லிம்களின் சிறிய பிரிவுகள் கூட பாதுகாப்பாக இல்லை" என்று பாகிஸ்தானின் தேசியசட்டமன்ற அமர்வின் போது கவாஜா கூறியதாக டான் நியூஸ் மேற்கோளிட்டுள்ளது.
இந்த தாக்குதல்களை "கவலை மற்றும் சங்கடமான விஷயம்" என்று அழைத்த ஆசிப், சிறுபான்மையினரைப் பாதுகாக்க ஒரு தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தார். பாதிக்கப்பட்ட பலருக்கு மத நிந்தனை குற்றச்சாட்டுகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஆனால் தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
"நமது சிறுபான்மைச் சகோதர சகோதரிகளின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும். பெரும்பான்மையினருக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை அவர்களுக்கும் இந்த நாட்டில் உண்டு. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் அல்லது வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாகிஸ்தான் அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் சொந்தமானது. நமது அரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்கிறது" என்று ஆசிப் கூறியதாக டான் மேற்கோளிட்டுள்ளது.