உதயங்கவின் பயணத்தடை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு வரவழைப்பதில் உதயங்க வீரதுங்க முக்கிய பங்காற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை அடுத்த நீதிமன்ற விசாரணை வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உதயங்க வீரதுங்க தனது சட்டத்தரணி ஊடாக விண்ணப்பம் செய்தார். ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு வரவழைப்பதில் உதயங்க வீரதுங்க முக்கிய பங்காற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மிக் விமான ஒப்பந்தம் தொடர்பாக உதயங்க வீரதுங்கவிற்கு நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. கூறப்படும் ஒப்பந்தத்தின் மதிப்பு 14 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது. சிறிலங்கா விமானப்படைக்கு ஏழு மிக்-27 தரைத் தாக்குதல் விமானங்களைக் கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நீதவான் விசாரணை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.