வெகுளித்தனமான அரசியல்
தமிழ் தேசிய அரசியல் என்பது இன்று ஒரு வெகுளித்தனமான அரசியலாக உருவெடுத்திருப்பது ஈழத்தமிழர்களுக்கு பெரும் பின்னடைவாகும்.குறிப்பாக ஈழத்தில் அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள் பதவிகளுக்காக போடும் தெருச்சண்டை இனத்தின் சாபக்கேடாகும். அந்த அடிப்படையில் தமிழினத்தின் பாரம்பரிய கட்சியான தமிழரசுக்கட்சியின் பதவிக்காக போடும் சண்டை என்பது அக்கட்சிக்கு மாத்திரமல்ல தமிழினத்துக்கே வெட்கக்கேடான ஒரு செயற்பாடாகும். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்காக ஸ்ரீதரனும் சுமந்திரனும் பொதுவெளியில் சண்டையிட்டதும் தூற்றிக்கொண்டதும் ஒரு முடிவுக்கு வந்தநிலையில், பொது செயலாளர் பதவிக்காக மீண்டும் தமிழரசு கட்சி இரண்டு துருவங்களாக பிரிந்து மோதிக்கொள்கின்றன.
இது இவர்களுடைய பதவி மோகத்துக்கான ஆவலை வெளிக்காட்டி நிற்கிறது. இனத்தின் விடிவை தாண்டி - இனத்தின் விடுதலையை தாண்டி பதவி மோகம் கொண்ட இவ்வாறான தலைமைகளினால் இனத்துக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதி.2009 இற்கு முன்னர் ஈழத்தமிழினம் ஒரு குடையின் கீழ் நின்றது. அதன் காரணத்தினால் சர்வதேசம் தமிழினத்துக்கு ஒரு கௌரவத்தை கொடுத்தது. ஆனால் அந்த நிலைமை இன்று இல்லை. 2009 இற்கு பின்னரான 15 வருடங்கள் என்பது ஈழத்தமிழருக்கு ஒரு சாபக்கேடான வருடங்களாகவே நகர்ந்திருக்கிறது.
குறிப்பாக போட்டி அரசியலும், பதவி மோகமும் மாத்திரமே தமிழர் தேசத்தின் தலைமைகள் மத்தியில் நிலவி வந்திருக்கிறது. குறிப்பாக முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு பின்னர் ஈழத்தமிழர் விவகாரத்தை சிறிலங்காவின் அரச தலைவர்களை அச்சுறுத்துவதற்கும் தங்களுடைய நலன்களை விரிவுபடுத்துவதற்குமே சர்வதேசம் பயன்படுத்தி வருகிறது. அதற்கு காரணம் தமிழ் தலைமைகளும் மக்களும் ஒரு குடையின் கீழ் ஒரு பலமான-ஒற்றுமையான அணியாக இல்லாததே ஆகும்.அண்மையில் கூட இந்தியாவை பல ஆண்டுகளாக எதிர்த்துவந்த - விமர்சித்துவந்த ஜே.வி.பி.யை இந்தியா செங்கம்பள வரவேற்பு அளித்திருக்கிறது.
ஆனால், இந்தியாவையே நம்பியிருந்த ஈழத்தமிழினத்தின் தலைவர்கள் புதுடில்லியுடன் சந்திப்புகளை மேற்கொள்வதற்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அந்த கோரிக்கைகளை இந்தியா தொடர்ந்தும் புறக்கணித்து வருவதை கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அவதானிக்க முடிகிறது. இதுதான் தற்போதைய புவிசார் அரசியல் போக்கு. இதனை தமிழ் தலைமைகள் புரிந்துகொள்வது அவசியம். நாம் என்று பலமான ஒரு இனமாக வளர்கிறோமோ அன்றே சர்வதேசம் எங்கள் இனத்தின் மீது தன்னுடைய பார்வையை திருப்பும். அதன் காரணமாகத்தான் இந்தியா பல தடவைகள் ஒற்றுமையுடன் வாருங்கள் பேசலாம் என்ற செய்தியை தமிழ் தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அந்த ஒற்றுமை என்ற பலத்தை அல்லது அதன் பின்னால் பொதிந்திருக்கும் இறுக்கமான செய்தியை தமிழ் தலைவர்களில் எவரும் உணர்ந்ததாக இல்லை.
எனவே எங்களுடைய தலைவர்கள் இனத்தின் விடுதலை, அரசியல் தீர்வுரூபவ் தமிழ் மக்களின் விடிவு என்ற விடயங்களை மறந்துவிட்டார்கள். இன்று அவர்களுடைய தேவைகள் எல்லாம் தங்கள் அரசியலில் எந்தளவுக்கு சக்திவாய்ந்தவர்களாக - பதவியில் அமர்வது என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். எனவே மக்களூடாகத் தான் ஈழத்தின் விடிவு தங்கியிருக்கிறது. மக்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவது காலத்தின் தேவையாகும். இந்த தலைவர்களின் செயற்பாடுகளை புரிந்துகொண்ட ஒரு குடையின் கீழ் ஒரு பலமான இனமாக தமிழினம் வளர்வதிலேயே அவர்களுடைய எதிர்காலம் தங்கியிருக்கிறது என்பதை கூறிவைக்கின்றோம்.
“நீதிக்கான குரல்” இதழின் வாயிலாக வாசகர்கள் அனைவருக்கும் எமது வேண்டுகோள் என்னவென்றால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு நீதிக்காக போராட முன்வரவேண்டும். மேலும் இந்த இதழை உங்களது நண்பர்கள்;, உறவினர்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று வேண்டுகிறோம்.
ஒன்றிணைந்து! இச்சமூகத்தை மாற்ற நம்மால் இயலும். அடுத்த பதிப்பில் யாம் உங்களை சந்திப்போம்ரூபவ் அதுவரை அன்புடன்,
உங்கள்
சதீஸ்சன் குமாரசாமி
தலைமை ஆசிரியர்